×

கொரியர்களுக்குப் பிடித்த கிம்ச்சி

அழகிலும், ஆரோக்கியத்திலும் உலகளவில் முன்னோடியாக இருப்பவர்கள் கொரிய நாட்டு மக்கள். அங்குள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே தங்களது உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமே அவர்களது உணவுக்கலாச்சாரம்தான். கொரியர்களின் உணவு உண்ணும் பழக்கமே ஆரோக்கியம் மிகுந்ததாய் இருக்கிறது. கொரிய மக்கள் டயட் என்ற பெயரில் எந்த உணவினையும் ஒதுக்கி வைப்பதில்லை. ஆனால் உணவுகளின் அளவில் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். எனவே, எந்த உணவாக இருந்தாலும், இவர்கள் அளவாகவே சாப்பிடுவார்கள். அதுபோன்று, அசைவத்தில் கடல் உணவையே அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேசமயம், இவர்களது உணவில் அதிகளவில் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். எனவே, அவர்களது உணவு மேஜையில் காய்கறிகளுக்கு முக்கிய இடம் உண்டு. புரதம் தொடங்கி கார்ப்ஸ் முதல் கொழுப்புகள் வரை, ஆரோக்கியமான உணவு அனைத்தையும் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் குறைந்த கலோரி கொண்ட உணவுகளே கொரியர்களின் உணவு ரகசியத்தில், பிரதானமாக இருக்கிறது. அதுவே, அவர்களது ஸ்லிம் உடல்வாகிற்கும், ஆரோக்கியத்துக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. அதுபோன்று கொரியர்களின் உணவினைப் பொருத்தவரை புளித்த உணவுகள் சைட் டிஷ்ஷாக அவர்களது சாப்பாட்டில் தொடர்ச்சியாக இருக்குமாம். இத்தகைய உணவுகள் குடலுக்கு சிறந்ததாக உள்ளன. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவி செய்கிறது.இவர்களது புளித்த உணவுகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது கிம்ச்சி என்ற உணவாகும். இது ஒரு கொரிய சைட் டிஷ் ஆகும். அதேசமயம், கிம்ச்சி ஒரு பாரம்பரிய கொரிய உணவும் கூட. இது பெரும்பாலும் முட்டைக்கோஸ், முள்ளங்கி, பச்சை வெங்காயம் மற்றும் பல காய்கறிகளைப் புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. அதுபோன்று உப்பு, சர்க்கரை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் மிளகுத்தூள் போன்ற மசாலாப் பொருட்களும் இவர்களது உணவில் முதலிடம் வகிக்கின்றன.

கொரியர்களைப் பொருத்தவரை, ஜங் ஃபுட், துரித உணவு அல்லது தெருவோர உணவுகள் போன்ற வெளி உணவுகளை அவ்வளவாக விரும்புவதில்லையாம். மாறாக, வீட்டில் சமைத்த உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்கள். கடல் உணவு அவர்களின் பிரதான உணவில் ஒரு சிறந்த உணவாகவும், முக்கியமான உணவாகவும் உள்ளது. ஆனால், அதிக எடை கொண்ட இறைச்சிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், கடல் உணவுகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் விசயத்தில் பாசிட்டிவ்வான அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. மாட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் ஒப்பிடும்போது மூன்று அவுன்ஸ் மீனை எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் மிகுந்தது. இது ஜீரணிக்க மிகவும் எளிதானது. கலோரிகள் மிக குறைவாக இருக்கும். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், சாப்பிட்டு வரும் மனிதருக்கு ஆயுளை நீட்டிக்க உதவி செய்கிறதாம். அதேநேரத்தில் ஆரோக்கியமான பசி உணர்வைத் தூண்டி உடலைப் பராமரிக்கவும் உதவுகிறதாம்.அதுபோன்று, இவர்களது ஆரோக்கியத்திற்கு மீன்களைத் தவிர, கடற்பாசியும் முக்கிய காரணமாகும்.

கடற்பாசி கொரியர்களின் பொதுவான உணவுப் பொருளாகும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கடற்பாசி நிறைய நார்ச்சத்து உள்ளதுடன், செரிமானத்திற்கும், நீண்ட காலம் இளமையாகவும் வைக்க உதவுகிறதாம். ஆதலால் கடற்பாசியினை வழக்கமான உணவிலிருந்து சூப் வரை அனைத்திலும் இவர்கள் சேர்த்து சாப்பிடுகிறார்களாம்.முன்பு சொன்னதுபோல, என்னதான் அசைவ உணவுகள் மற்றும் கடல் உணவுகளை அவர்கள் விரும்பினாலும், காய்கறிகளுக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். மேலும், கொரிய மக்களின் வாழ்க்கை முறையானது, நடைப்பயணம், நடைபயிற்சி மற்றும் ஓட்டம் போன்றவற்றையும் கொண்டதாக அமைந்துள்ளது. குறிப்பாக குறுகிய தூரம் அல்லது அருகிலுள்ள இடங்களுக்கு பயணிக்கும்போது, பொது அல்லது தனியார் போக்குவரத்தினை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, நடப்பதையே பெரிதும் விரும்புகிறார்கள். அதுபோன்று அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையை விட, உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளிலேயே அதிகம் ஈடுபடுகின்றனர். இந்த இயல்பு காரணமாகவே, அவர்கள் ஆரோக்கியமான உடல்
மற்றும் சிறந்த உடலமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.

– ரிஷி

The post கொரியர்களுக்குப் பிடித்த கிம்ச்சி appeared first on Dinakaran.

Tags : Koreans ,
× RELATED ஜிஎஸ்டி மோசடி வழக்கில் வீட்டு காவலில்...