×

கோபிச்செட்டிபாளையத்தில் அரசு பேருந்துகள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டதை கண்டித்து பயணிகள் போராட்டம்.!!

ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்திலிருந்து அருகில் உள்ள கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் மூன்று அரசு பேருந்துகள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டதை கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்பாளையம், பங்களாபுதூர், கே.என்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் பின்னலாடை நிறுவனங்கள், ஜவுளி கடைகளுக்கு வேளைக்கு சென்று வருகின்றனர்.

இவர்களுக்காக கோபி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நன்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.35 மணி வரை இயக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து உரிய புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கோபி பேருந்து நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைபிடித்த பயணிகள் பேருந்து நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post கோபிச்செட்டிபாளையத்தில் அரசு பேருந்துகள் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டதை கண்டித்து பயணிகள் போராட்டம்.!! appeared first on Dinakaran.

Tags : Kobichettipalayam ,Erode ,Kopichettipalayam ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா