கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*நான்கு பங்கு அரிசி மாவு, ஒரு பங்கு கடலைமாவு விகிதத்தில் கலந்து முறுக்கு செய்தால் சுவையாகவும், கரகரப்பாகவும் இருக்கும்.
*முறுக்கு போன்ற தின்பண்டங்கள் பொரிக்கும் போது வாணலியின் அடியில் உப்பைத் தெளித்துவிட்டால் பண்டங்கள் ஒட்டிக் கொள்ளாது.
*பச்சை மிளகாயை சூடான நீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் காரம் குறையும்.

– எஸ். ராஜம், திருச்சி.

*வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களை பொரித்து நொறுக்கி போட்டு, குழம்பை இறக்கினால் வாசனையாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுவலில் வறுத்த நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி அரிசியை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து சேர்த்தால் கூடுதல் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
*முட்டைக் கோஸை துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.

– ச.லெட்சுமி, செங்கோட்டை.

*பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து துவையல் போல் செய்து சாப்பிடலாம்.
*அரிசி, பருப்புகளில் புழு அண்டாமல் இருக்க காய்ந்த கறிவேப்பிலைகளை அடியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
*தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க அதை குளிர்ந்த நீரில் போட்டு வைக்கலாம். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

– எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

*கூட்டுக்கு அரைக்க தேங்காய், சீரகம், மிளகாய்க்கு பதில் தேங்காய், ஓமம், பொட்டுக்கடலை, மிளகாய் அரைத்துப்போட வித்தியாசமான மருத்துவ குணமுள்ள கூட்டு ரெடி.
*கோதுமை மாவில் பூச்சி, புழு வராமல் தடுக்க பிரிஞ்சி இலையை கோதுமை மாவில் போட்டு வைத்தால் எதுவும் அண்டாது.

– எஸ்.வேல்அரவிந்த், திண்டுக்கல்.

*நெத்திலி மீன் சமைக்கும்போது மீனின் நடுமுள்ளை நீக்கி கழுவி பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாங்காய் துண்டும் சேர்த்து அவியல் செய்தால் ருசியோ ருசி.

*கணவாய் மீன் சமைக்கும் ேபாது பெருஞ்சீரகம், தேங்காய் வத்தல் சேர்த்து பொரியல் செய்தால் மணக்கும். கணவாய் மீனை கறி சமைக்கும் முறையில் சமைத்தால் கறியின் மணமும், ருசியும் கணவாய் மீன் சமையலில் இருக்கும்.

*ரவா தோசை செய்யும்போது சிறிது கடலைமாவு சேர்த்தால் சுவை கூடும்.

– இ.லட்சுமி, நாகர்கோவில்.

*இரண்டு கரண்டி ரவை, ஒரு கரண்டி அரிசி மாவு, ஒரு கரண்டி ஓட்ஸ் பவுடர் கலந்து தோசை வார்த்தால் சுவையான ரவை ஓட்ஸ் தோசை தயார்.

*மோர்க்குழம்பில் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் குழம்பு மணக்கும்.

*மோர் களியில் கிளறி முடித்த பின்னர் தனியே மோர் மிளகாயைக் காம்புடன் பொரித்துப் போட்டால் மிளகாய் கரகரப்போடு சுவைக்கும்.

– என்.பர்வதவர்த்தினி, சென்னை.

*வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்த பாயசம் போன்ற எதுவாக இருந்தாலும், பாயசம் நீர்த்து இருந்தால் வீட்டில் இருக்கும் ஏதாவது பிஸ்கட்டை லேசா கையில் பொடித்துப் போட சுவையும் கூடும்.

*காராசேவு, காராபூந்தி செய்யும் போது 3 கப் கடலைமாவுக்கு, 1 கப் அரிசிமாவு என்ற விகிதத்தில் போட்டால் நன்றாக வரும். ஓமம், சீரகம், எள்ளு, வெண்ணெய் கலந்து செய்ய அருமையான சுவையுடன் இருக்கும்.

*ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் அடுப்பில் வைத்து காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி பிறகு பஜ்ஜி போட்டு எடுத்தால் வாசனையாக இருக்கும்.

*ஒரு ஆழாக்கு அரிசி மாவிற்கு, ஒரு டீஸ்பூன் வறுத்து அரைத்த உளுந்தம்பருப்பு மாவு சேர்த்து செய்ய சீடை நன்றாக இருக்கும்.

தொகுப்பு: கே. ஆர். உதயகுமார், சென்னை.

 

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: