×

கிச்சன் டிப்ஸ்

 

* தக்காளி சாதம் கிளறும்போது, பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை அரைத்துவிட்டுச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டுவிட்டால் தக்காளி சாதம், பிரியாணி போல் வாசனையாக இருக்கும்.
* முட்டைக்கோஸின் மையத்தில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டுச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
* முள்ளங்கியைக் கேரட் துருவியில் நீளவாக்கில் துருவி, மிதமான நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவையாக இருக்கும். வெயிலுக்கு மிகவும் நல்லது.
* சாம்பார், கீரை, புளிப்புக் கூட்டு போன்றவற்றைக் கொதித்து இறக்கும் நேரத்தில் துளி வெந்தயப்பொடி தூவி இறக்கலாம். நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.
* வித்தியாசமான முறையில் பருப்புப்பொடி செய்ய நினைத்தால் பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரைத் தேங்காய் வறுத்துச் சேர்த்து பருப்புப்பொடி அரைக்கலாம். பொடி மிகவும் வாசனையாக இருக்கும்.
* சம்பா கோதுமையில் உப்புமா செய்யும்போது கடைசியாக இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்விட்டு இறக்கி வைக்கவும். உப்புமா அதிக மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* வறுத்த புழுங்கல் அரிசியை அரைத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும். கூட்டு, வதக்கல் செய்யும்போது கடைசியாக லேசாகத் தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.
* சிலர் பொரியலில், முக்கியமாக உருளைக்கிழங்கு பொரியலில் மொறு மொறுப்புக்காகக் கடலைமாவை சேர்ப்பார்கள். கடலை மாவைவிடப் பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால் சுவை கூடும்.– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி.
* சர்க்கரை வைக்கும் டப்பாவில் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்பு வராது.
* உப்பு டப்பாவில் சிறிது அரிசியைப் போட்டு வைத்தால் உப்பு கட்டியாகாமல் இருக்கும். கட்டிகள் உருவாக காரணமாக இருக்கும் உறைவை அரிசி உறிஞ்சிவிடும்.
* கொழுக்கட்டைக்கு மாவு பிசையும்போது நீருடன் சரிபாதி பால் ஊற்றி செய்தால் கொழுக்கட்டை கூடுதல் சுவையுடன் இருக்கும். வெள்ளை வெளேர் என்றும் இருக்கும்.
* நான்கு பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, பூரி மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் மொறு மொறு பூரி கிடைக்கும்.
* இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கையும் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* பருப்பு அடை செய்யும்போது இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, மிளகாய் இவற்றுடன் தாக்காளிப் பழங்களையும் சேர்த்து அரைத்து அடை செய்தால் சுவையாக இருக்கும்.
* பருப்புப்பொடிக்கு அரைக்கும்போது இரண்டு தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும். ஜீரணத்துக்கும் நல்லது.
* அப்பளத்தை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது எடுத்துப் பொரித்தால் சிவந்தும் போகாது எண்ணெயும் அதிகம் குடிக்காது.
* தேங்காய் பத்தைகளை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மீது தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் பத்து நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
* ஒரு டப்பாவில் சிறிது சர்க்கரையைத் தூவி, அதன் மேல், பிஸ்கட்டைப் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் நமுத்துப் போகாமல் இருக்கும்.
* கத்தரிக்காயை வேக வைக்கும்போது அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிரைச் சேர்த்தால் கத்தரிக்காய் நிறம் மாறாமல் இருக்கும். சுவை கூடுதலாக இருக்கும்.
* எலுமிச்சம் பழத்தை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் தண்ணீரில் போட்டு வைத்து எடுத்து வைத்தால் ஃப்ரிட்ஜில் வைக்காமலே ஒரு வாரம் வரை வாடாமல், கெடாமல் இருக்கும்.
* தோசைமாவில் ஒரு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்துக் கரைத்து தோசை வார்த்தால் ஹோட்டல் தோசையைப் போன்று சுவையாக இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அது சூடாக இருக்கும்போதே அரை கிண்ணம் தேங்காய்ப்பால் ஊற்றி கிளறியபின் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
* தேங்காய்த் துவையலில் தனியாவையும் சிறிது சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
* ரசப்பொடி கைவசம் இல்லாதபோது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் சிறிதளவு துவரம் பருப்பை வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும்.– ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…