பள்ளிபாளையம்: இரண்டு கிட்னியும் செயலிழந்து, நடை பிணமாக வாழும் ஒருவரின் ஆயுளை நீட்டிக்க கிட்னி தானம் செய்யும் முறை மெல்ல மாறி, தற்போது கிட்னி வியாபாரமாகி விட்டது. விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பள்ளிபாளையத்தில், கடந்த 30 ஆண்டுகளாக இந்த வியாபாரம் ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து வருகிறது. 35 ஆயிரம் ரூபாயில் தொடங்கிய இந்த வியாபாரம் தற்போது ஆறு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள தொழிலாளர்களில் சிலர், பெங்களூரு சென்று அங்குள்ள மருத்துவமனை கொடுத்த 35 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு, ஒரு கிட்னியை விற்பனை செய்து ஊர் திரும்பினர். இதில் பலரும் தங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக ஆசைகாட்டி 35 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அப்போது ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனாலும் கிட்னி விற்பனை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு முறை கிட்னி கொடுத்த தொழிலாளி மறுமுறை சக தொழிலாளியை அழைத்துச்செல்லும் மருத்துவமனை புரோக்கராக மாறிவிடுகிறார். அவரை அணுகும் மற்ற தொழிலாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அங்குள்ள பெரும் புரோக்கரிடம் ஒப்படைத்து விடுவார்.
விசைத்தறி தொழிலாளியின் வாழ்க்கை திட்டமிடப்படாதவை. வாரம் நான்காயிரம் ரூபாய் வருமானம் பெற்றாலும் ஊதாரிச்செலவுகளால் கூலிப்பணம் கரைந்து போய் கந்து வட்டிக்கு கடன் வாங்கி மீளமுடியாத நிலைக்கு சென்றுவிடுகிறான். விசைத்தறி கூடத்திலும் பாக்கிக்கு மேல் பாக்கி வழங்கி பல லட்சம் ரூபாய் கடன் ஏறி விடுகிறது. விளைவு கடனை அடைக்க கிட்னியை விற்பனை செய்யும் நெருக்கடியில் சிக்கி விடுகிறார்கள்.
கடன் தொல்லையால் அவமானப்பட்டு அல்லல்படும் நிலையில் அவனது கால்கள் தானாகவே புரோக்கர்களை தேடி ஓடுகின்றன. கிட்னி அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒருவருக்கு சுமார் ரூ30 லட்சம் வரை மருத்துவமனைகள் கட்டணம் பெறுகின்றன. இதற்காக உள்ள புரோக்கர்களிடம் மருத்துவமனைகள் அசைன்மென்டை ஒப்படைத்துவிடுகின்றன. அதன்பின்னர் மருத்துவமனை புரோக்கர் தன்னை நாடி வரும் ஏழைத்தொழிலாளிகளை தயார்படுத்துகின்றனர். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயாரித்து கொடுக்கப்படுகின்றன. கிட்னி கொடுப்பவர் ஆண் எனில் அவருக்கு மனைவியும், பெண் எனில் அவருக்கு கணவரும் போலியாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட தொகையை மருத்துவமனையே கொடுத்து விடுகிறது. நீண்டகாலமாக நடைபெற்று வரும் இந்த கிட்னி விற்பனை உடல் உறுப்பு சட்டத்தின்படி குற்றமே.
இருந்த போதிலும் கிட்னி தேவைப்படும் பெரும் செல்வந்தர்களுக்கு சில வருடங்கள் உயிர்வாழ பல லட்சங்கள் பெரியதாக தெரியவில்லை. கடன் தொல்லையில் சிக்கி அவமானப்படும் நடுத்தர ஏழைத்தொழிலாளர்களுக்கு இந்த பணம் தற்காலிகமாக கடன் சுமையிலிருந்து விடுபட முடிகிறது.அவ்வப்போது வெளிச்சத்திற்கு வரும் இந்த கிட்னி விற்பனை விவகாரம் தற்போது மீண்டும் அம்பலத்திற்கு வந்துள்ளது. ஆலாம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், டிஎஸ்பி இமயவரம்பனை சந்தித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது விசைத்தறி கூடத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை அருகில் உள்ள மளிகை கடை உரிமையாளர் மூளைச்சலவை செய்து கிட்னி விற்பனை செய்ய தூண்டுகிறார் என தெரிவித்திருந்தார். இது குறித்து டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கொச்சியில் உள்ள கிட்னி மருத்துவமனைக்கு வந்த சிலர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இருந்து வந்ததாகவும், கிட்னியை விற்பதால் ரூ5 லட்சம் கிடைக்குமெனவும், இந்த பணத்தைக் கொண்டு கடன் தொல்லையிலிருந்து விடுபட்டுவிடுவோமெனவும் தெரிவித்துள்ளனர். ஒரு முறை கிட்னி கொடுத்த தொழிலாளி மறுமுறை சக தொழிலாளியை அழைத்துச்செல்லும் மருத்துவமனை புரோக்கராக மாறிவிடுகிறார்.
The post ‘கிட்னி’யை பறிகொடுக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்: கொடுப்பது ரூ6 லட்சம்… சம்பாதிப்பது ரூ30 லட்சம்… appeared first on Dinakaran.