×

கேரள எல்லை தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்: வீடியோ வைரல்

கூடலூர்: கேரள எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகள் இருவர் காட்டு யானையிடமிருந்து உயிர் தப்பிய சம்பவத்தை எதிரில் மற்றொரு வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணி வீடியோ எடுத்து வைரலாக்கி உள்ளார். கேரளா, கர்நாடகா எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் காரில் வந்த சுற்றுலா பயணிகள் சிலர் சாலை ஓரத்தில் ஒரு குட்டியுடன் 2 யானைகள் மேய்ச்சலில் ஈடுபட்டதை பார்த்துள்ளனர். அப்போது காரில் வந்த இருவர் சாலையில் இறங்கி யானைகளை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அப்போது ஒரு யானை திடீரென அவர்களை துரத்தியது. காரில் வந்தவர்கள் காரை வேகமாக எடுக்க, சாலையில் நின்றவர்கள் பின்னால் ஓடி வந்தனர். யானையும் சிறிது தூரம் விடாமல் துரத்தியதில் ஒருவர் சாலையில் கீழே விழுந்துவிட்டார். திடீரென யானை அவரை காலால் மிதித்தது.

அப்போது எதிரில் வந்த லாரி டிரைவர் வேகமாக ஹாரன் அடித்ததால் யானை அந்த நபரை விட்டுவிட்டு அங்கிருந்து திரும்பி காட்டுக்குள் ஓடியது. யானையிடம் மிதிபட்ட நபர் காலில் லேசான காயத்துடன் வனப்பகுதிக்குள் தவழ்ந்து ஓடி தப்பித்தார். இதனை கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த சபாது என்பவர் தனது காரில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்யும் இவர் விடுமுறையில் வந்து, தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் முத்தங்கா சரணாலயம் வழியாக குண்டல்பேட்டை மற்றும் மைசூர் சென்று பின்னர் அங்கிருந்து மசினகுடி மற்றும் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு வந்துள்ளார்.

அப்போதுதான் காட்டு யானை இருவரை துரத்தியதை பார்த்து காரில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளார். காரில் இருந்த அவரது மனைவி, குழந்தைகள் சம்பவத்தை பார்த்து அலறி உள்ளனர். யானையிடம் சிக்கிய நபர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என கூறப்படுகிறது. புலிகள் காப்பகம், சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வாகனங்களில் இருந்து இறங்குவதும், வனவிலங்குகளுக்கு தொல்லை கொடுப்பதும் குற்றம் என்றும், இது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் வனத்துறை பல்வேறு வகையில் எச்சரித்தும் அதை மீறும் சுற்றுலா பயணிகள் இதுபோன்று ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

The post கேரள எல்லை தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் யானையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,highway ,Cuddalore ,Karnataka ,Kerala border ,Dinakaran ,
× RELATED திருவாடானை அருகே சாலையில் கவிழ்ந்த மாம்பழம் ஏற்றிய லாரி