×

கேரளாவில் ஒரே நாளில் மழைக்கு 3 மாணவர்கள் உள்பட 5 பேர் பலி: கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழைக்கு நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்பட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்கிறது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

பம்பை, அச்சன்கோவில், மணிமலை, பெரியாறு மீனச்சல் உள்பட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம், அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல சிறிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மழைக்கு 3 மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் 2 பேரும், கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்தனர். கண்ணூர் தலச்சேரியில் ஆற்றில் குளிக்கச் சென்ற முஸ்தபா மகன் சினான் (20) என்ற கல்லூரி மாணவரை காணவில்லை.

இன்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்றும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோட்டயம், கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் இன்றும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் ஒரே நாளில் மழைக்கு 3 மாணவர்கள் உள்பட 5 பேர் பலி: கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED கேரளாவில் 10ம் வகுப்பு...