×

கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு: காவிரி ஆணையம் அதிரடி

புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கர்நாடகா அரசின் கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 87வது கூட்ட இரு தினங்களுக்கு முன்னதாக நடந்தது. அந்த கூட்டத்தில் 28.09.2023 முதல் 15.10.2023 வரையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 25வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் தரப்பில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் மணிவாசன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும், அதே போன்று காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியம், உறுப்பினர் எல். பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரம்யா நேரடியாகவும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது தமிழ்நாடு அதிகாரிகள் வைத்த கோரிக்கையில், ‘‘காவிரியில் இருந்து முன்னதாக வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது 2000 கன அடி தண்ணீரை குறைத்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என கடந்த 27ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கு நீர் தேக்க அணைகளில் 50 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் இருப்பதால் தமிழ்நாடு கேட்கும் 12.5 டி.எம்சியை உடனடியாக திறந்து விட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.

மேற்கண்ட கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு தரப்பு அதிகாரிகள், ‘‘எங்களது மாநிலத்தில் போதிய மழை கிடையாது.எனவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கும் விவகாரத்தில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’’ என திட்டவட்டமாக தெரிவித்தனர். அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கர்நாடகா அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதனால் 28.09.2023 (நேற்று) முதல் 15.10.2023 வரையில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி என்ற வீதம் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும். நிலுவை நீரையும் திறந்து விட கர்நாடகா அரசு முடிந்த வரையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

The post கர்நாடகா அரசின் கோரிக்கை நிராகரிப்பு 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு: காவிரி ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Karnataka Government ,Cauvery Commission ,New Delhi ,Cauvery ,Tamil Nadu ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...