×

கர்நாடகாவில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்; 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு; வாக்குசாவடிகளை தயார் செய்யும் பணி மும்முரம்..!!

பெங்களூரு: கர்நாடகத்தில் நாளை நடைபெறும் வாக்குபதிவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை நடைபெறக்கூடிய வாக்குபதிவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. கர்நாடகத்தில் மொத்தமாக இருக்கக்கூடிய 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 58 ஆயிரம் வாக்கு சாவடிகளை தேர்தல் ஆணையம் தயார்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு தொகுதி வாரியாக அந்தெந்த பகுதியில் இருக்கக்கூடிய தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு அவை எடுத்துச் செல்லக்கூடிய பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 1 லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 84 ஆயிரம் கர்நாடக போலீசாரும், 8,500 அண்டை மாநில போலீசாரும் உள்ளனர். அதுமட்டுமின்றி சி.ஆர்.பி.எஃப், ஏ.சி.ஆர்.எஃப் உள்ளிட்ட துணைநிலை ராணுவத்தினரும், 650 பட்டாலியன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

வாக்குசாவடிகளை பொறுத்தவரை 3 லட்சத்து 6 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு மாலை 6 மணி வரை நடத்தப்படவுள்ளது. 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

The post கர்நாடகாவில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்; 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு; வாக்குசாவடிகளை தயார் செய்யும் பணி மும்முரம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Karnataka Bengaluru ,Dinakaran ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...