மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், அங்குள்ள கபினி அணையில் இருந்து, கடந்த 17ம் தேதி முதல் 25ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல கிருஷ்ணசாகர் அணையில் இருந்து 1359 கனஅடி வெளியேற்றப்பட்டது.
இதனால் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 20ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து நீர்திறப்பு 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,359 கனஅடி திறக்கப்படுகிறது. இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நேற்று மாலை 4மணியளவில், 19ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. அருவிகளில் புது வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 3வது நாளாக நீடிக்கிறது. அதேசமயம் பரிசல் இயக்க தடை விதிக்கப்படவில்லை.
இதனிடையே, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து நேற்று காலை 8 மணியளவில், 21,628 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 16ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் காலை 113.69 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 114 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 84.22 டிஎம்சியாக உள்ளது.
The post கர்நாடகாவில் இருந்து 13,000 கனஅடி நீர்வரத்து; டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 18,000 கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க 3வது நாளாக தடை appeared first on Dinakaran.
