×

கர்நாடகா சட்டசபை தேர்தல் நட்சத்திர பேச்சாளர்களுக்கு சுயக்கட்டுப்பாடு: தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி

புதுடெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்கள் சுயகட்டுப்பாடுடன் பேச வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பாஜ, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதாகவும், வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் மாறிமாறி புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதை தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம். முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்றவர்கள் அப்படி பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான புகார்களும், எதிர் புகார்களும் ஊடகங்களில் எதிர்மறையான கவனத்தை பெற்றுள்ளன. ஆகவே, அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்து விடக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கர்நாடகா சட்டசபை தேர்தல் நட்சத்திர பேச்சாளர்களுக்கு சுயக்கட்டுப்பாடு: தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly ,New Delhi ,Election Commission ,Karnataka assembly elections ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு; வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்வு