×

காரைக்கால் பேரிடரில் சிக்கும் அபாயம் செயலிழந்துபோன பிரெஞ்சு இந்திய வடிகால் அமைப்புகள்-மாவட்ட ஆட்சியர் கவனிப்பாரா?

காரைக்கால் : புதுச்சேரி மாநிலத்தின் வீதிகளில் நடந்து செல்கின்ற போது நாம் அனைவரும் பிரெஞ்சு நாட்டில் வசிப்பது போன்றதொரு உணர்வை புதுச்சேரி சாலைகள் நமக்கு உணர்த்தி வருகின்றன. தற்போது காரைக்காலில் உள்ள அனைத்து சாலைகளும், வடிகால் அமைப்புகளும் அதற்கு நேர்மாறாக உரிய பராமரிப்புகள் இன்றி தனது அழகிய உருவத்தை இழந்து வருகிறது. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்ட போது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் அழகும், பொலிவும் பெற்றிருந்தது. பிரான்ஸ் தேசத்தில் உள்ளதைப் போலவே நேரான, அழகான சாலைகளை அமைத்தனர். சாலைகளின் இருபுறமும் அமைக்கப்பட்ட வாய்க்கால்கள் மூலம் ஆறுகளில் கலந்து கடலில் சேர வடிகால் வசதி செய்தனர்.

சாலையையும், வடிகாலையும் தினமும் சுத்தம் செய்ய ஆட்கள் இருந்தனர். குறிப்பாக 20 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காரைக்காலில் வெள்ளம் வடிய வடிகால்களே பெருமளவு பங்காற்றியுள்ளது. பொதுமக்களின் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் இந்த வடிகாலில் விழும். இக்கழிவு நீரானது கால்வாயில் கலந்து, அரசலாறு கழிமுகப்பகுதியில் வெளியேறி கடலில் கலக்கும். காரைக்காலில் சாக்கடை, கால்வாய், ஆறு இம்மூன்றும் பிரெஞ்சு வடிகால் வசதி அமைப்பின் நரம்பு மண்டலம் போல் செயல்பட்டன.

இதில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும், நீர் மட்டம் உயரும். அங்கு விரைகிற பணியாளர்கள் உடனடியாக அடைப்பை அகற்றி பொதுமக்களின் பாராட்டைப் பெறுவார்கள். அப்படிப்பட்ட வடிகால் வசதி இன்று, சட்ட விரோத ஆக்கிரமிப்பால் அடைபட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு அடைமழையிலும் பொதுப்பணி, நகராட்சி, வருவாய் துறையினர் கால்வாய்களின் அடைப்பை நீக்க பெரும் போராட்டத்தை சந்திக்கின்றனர்.

காரைக்காலின் கீழ்வெளி வருவாய் கிராமப் பகுதி கழிவு வெளியேற்றபாதை என பிரெஞ்சிந்திய மக்களால் புகழப்பட்டது. அந்த கீழவெளி வருவாய் கிராமத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி, அரசு உள்-வெளி விளையாட்டரங்கம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், போக்குவரத்துத்துறை அமைந்துள்ளது. இதுதவிர கட்டுப்பாடற்ற நகரமைப்பு நிர்வாகம் காரணமாக ஏராளமான குடியிருப்புகளும் உருவாகிவிட்டன.

இவை அனைத்துமே காரைக்காலின் கழிவுநீர் அமைப்பு இயங்கும் கீழ்வெளி வருவாய் கிராமத்தையே விழுங்கி விட்டன. இதனால், பேரிடர் மற்றும் அடை மழைக் காலங்களில் கழிவுநீர் வெளியேற்றம் என்பது இயற்கைப் போர் என்ற சூழலில் தள்ளப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கூடுதல் மாவட்ட ஆட்சியராக இருந்த முகமது மன்சூர் (முந்தைய ஆட்சியர்) கீழ்வெளி வருவாய் கிராமத்தின் அடைப்புகளை சரி செய்தார்.

அரசியல் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் ஜேசிபி எந்திரங்களால் கான்கிரீட் ஆக்கிரமிப்புகளை தகர்த்தெறிந்தார். அவரது பணி காலத்துக்குப் பின் இந்த வடிகால் வசதி செயலற்றுக் கிடக்கிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை ஒழுங்கு செய்யும் பணிகளில் முனைப்போடு செய்யப்பட்டு வருகிறது. ஆட்சியருக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் இந்த வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாகவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை, கால்வாய், வடிகால்களின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post காரைக்கால் பேரிடரில் சிக்கும் அபாயம் செயலிழந்துபோன பிரெஞ்சு இந்திய வடிகால் அமைப்புகள்-மாவட்ட ஆட்சியர் கவனிப்பாரா? appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puducherry ,France ,Dinakaran ,
× RELATED இனி நீங்கள் ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…