கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரும் பணியின்போது 4 சுவாமி சிலைகள் மீட்பு

*கன்னியாகுமரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரும் போது 4 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. கன்னியாகுமரியில் திரிவேணி சங்கமம் படித்துறையில் உள்ள கற்கள் இடிந்து கடலில் விழுந்து கிடந்தன. இதனால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற முக்கிய விசேஷ நாட்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களும், ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகளும் பாறாங்கற்களில் அடிபட்டு ரத்த காயத்துடன் எழுந்து செல்லும் நிலை இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து கடலில் இடிந்து விழுந்து கிடக்கும் பாறாங்கற்களை அகற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு இந்து இயக்கங்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடை மூலம் முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்தது. ராட்சத கிரேன் மூலம் கடலில் விழுந்து கிடந்த ஏராளமான பாறாங்கற்கள் அகற்றப்பட்டன. அப்போது 4 சாமி சிலைகள் கிடைத்தன.

இதில் 1 அடி உயரம் உள்ள 3 அம்மன் சிலைகள் மற்றும் ஒரு பலி பீடம் இருந்தன. கடலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சிலைகளை பக்தர்கள் கன்னியாகுமரி கிராம நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிலைகள் கன்னியாகுமரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. விரைவில் இந்த சாமி சிலைகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

The post கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரும் பணியின்போது 4 சுவாமி சிலைகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: