×

காஞ்சிபுரம் அருகே சேரும், சகதியுமான மீனாட்சி நகர் சாலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் பஞ்சாயத்தில் உள்ள மீனாட்சி நகரின் சாலை சேரும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் பஞ்சாயத்தில் உள்ள மீனாட்சி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக காஞ்சிபுரம், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக மீனாட்சி நகரின் சாலையினை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை, சிறு மழைக்கே சேரும் சகதியுமாக காணப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சிறு சிறு விபத்துகளில் சிக்கி பலரும் பாதிக்கப்படுவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இச்சாலையில் பாதி தூரம் வரை மட்டுமே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டும், பிரதான சாலையை இணைக்கும் மீதமுள்ள தூரம் எவ்வித சிமென்ட் சாலையோ அமைக்கப்படாத காரணத்தினால் தான், மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மீனாட்சி நகரில் ஆய்வு செய்து, சேரும் சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் அருகே சேரும், சகதியுமான மீனாட்சி நகர் சாலை appeared first on Dinakaran.

Tags : Meenakshi Nagar ,Kanchipuram ,Konerikuppam panchayat ,Meenakshi ,Union ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...