×

பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைக்க நடவடிக்கையா?தமிழக அரசு விளக்கம்

சென்னை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வி துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு எடுக்கவில்லை. வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரமலை கள்ளர் வகுப்பை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பிரமலைக் கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது.

மேலும், திறன்மிகு வகுப்பறைகள், இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளி கல்வி துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும்.

இப்பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வரும் சூழ்நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே, இப்பள்ளிகளை பள்ளி கல்வி துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானதும் மற்றும் உள்நோக்கம் கொண்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி கல்வித்துறையுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைக்க நடவடிக்கையா?தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kallar ,Tamil Government ,CHENNAI ,Tamil Nadu government ,Backward, Very Backward and Minority Welfare Department ,
× RELATED ரயில் மோதி 3 பெண்கள் பலி: கேரளாவில் பரிதாபம்