×

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை உஸ்பெகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா: 22 கோல் போட்டு அசத்தல்

ககாமிகஹாரா: மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி லீக் ஆட்டத்தில், இந்திய அணி 22-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்றைய ஆட்டங்கள் திட்டமிட்டபடி நடந்தன. முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள கொரியா – தைவான் அணிகள் மோதின. அதில் முன்னாள் சாம்பியன் கொரியா 5-1 என்ற கோல் கணக்கில் தைவானை பந்தாடியது.

அடுத்து ஏ பிரிவில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் வைஷ்ணவி முதல் கோலடித்து கணக்கை தொடங்கினார். தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் கோல் ஏரியாவை முற்றுகையிட்ட வண்ணம் இருந்த இந்திய மகளிர் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். முதல் பாதி ஆட்ட முடிவில் இந்தியா 10-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

2வது பாதியிலும் இந்தியாவின் கோல் மழை ஒயவில்லை. அதே சமயம், உஸ்பெகிஸ்தானின் கோலடிக்கும் முயற்சிகளை இந்திய வீராங்கனைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முறியடித்தனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 22-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அன்னு 6 கோல் அடித்து அசத்தினார். மும்தாஜ், துணை கேப்டன் தீபிகா தலா 4 கோல், தீபிகா சொரெங், சுனிலிதா, வைஷ்ணவி தலா 2 கோல் அடித்தனர். மஞ்சு, நீலம் தலா ஒரு கோல் போட்டனர். அன்னு ஆட்ட நாயகி விருது பெற்றார். இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை மலேசிய அணியுடன் மோத உள்ளது.

The post ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை உஸ்பெகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா: 22 கோல் போட்டு அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Junior Women's Asia Cup ,India ,Uzbekistan ,Kagamigahara ,Women's Junior Asia Cup Hockey League ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...