×

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி.யில் சேர நடந்த ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் 43,773 பேர் தேர்ச்சி: ஐதராபாத் மாணவன் முதலிடம்

சென்னை: ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது, 43,773 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.டி. ஆகிய ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இதில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை தேசிய தேர்வு முகமையும், அட்வான்ஸ்டு தேர்வை ஐ.ஐ.டி.க்களும் நடத்துகின்றன. அதன்படி, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இவற்றில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக அட்வான்ஸ்டு தேர்வையும் எழுதலாம். ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றால், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களின் படிப்புகளில் சேரலாம். அந்த வகையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தாள்-1, தாள்-2 தேர்வுகளை நாடு முழுவதும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 372 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வை இந்த ஆண்டு கவுகாத்தி ஐ.ஐ.டி. நடத்தியது. தேர்வு எழுதியவர்களில், 36 ஆயிரத்து 204 மாணவர்கள், 7 ,509 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 773 பேர் வெற்றி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஐதராபாத் ஐ.ஐ.டி. மண்டலத்தை சேர்ந்த மாணவன் வவிவாலா சித்விலாஸ் ரெட்டி 360 மதிப்பெண்ணுக்கு 341 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். மாணவிகள் தரப்பில் ஐதராபாத் ஐ.ஐ.டி. மண்டலத்தை சார்ந்த பவ்யா என்ற மாணவி 360 மதிப்பெண்ணுக்கு 298 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், மதிப்பெண் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை ஐதராபாத் ஐ.ஐ.டி. மண்டலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

The post ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி.யில் சேர நடந்த ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் 43,773 பேர் தேர்ச்சி: ஐதராபாத் மாணவன் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : J.J. ,UK ,Hyderabad ,Chennai ,N.N. ,GI ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...