- ஜம்மு
- சட்டமன்ற
- சட்டசபை
- பாஜக
- ஸ்ரீநகர்
- தேசிய மாநாடு கட்சி
- உமர் அப்துல்லா
- முதல் அமைச்சர்
- காஷ்மீர்
- சட்டப்பேரவை
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர் சட்டமன்றம்
- தின மலர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்ற பிறகு, கடந்த 4ம் தேதி முதன்முறையாக சட்டப்பேரவை கூட்டம் கூடியது. நேற்று முன்தினம் அவை கூடியபோது, 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ பேரவை உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை அவை மீண்டும் கூடியபோது பாஜ உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சுனில் சர்மா சிறப்பு அந்தஸ்து மீட்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது அவாமி இத்தேஹாத் கட்சி தலைவரும், பேரவை உறுப்பினருமான லங்காதே ஷேக் குர்ஷீத் 370வது சட்டப்பிரிவு, 35ஏ சட்டப்பிரிவுகளை மீட்டெடுக்க வேண்டுமென்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டார்.
இதற்கு பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவையின் மையப்பகுதிக்கு வந்த குர்ஷீத் பதாகையை உயர்த்தி பிடித்து தீர்மானத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டார். அவரை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் வலியுறுத்தியும் குர்ஷீத் செல்லவில்லை. அப்போது குர்ஷீத் கையில் இருந்த பதாகையை பாஜ உறுப்பினர்கள் பிடுங்கி கிழித்து எறிய முயன்றதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தபிறகும் பாஜ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் பாஜவினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், “முகர்ஜி தியாகம் செய்த காஷ்மீர் எங்களுடையது” என பாஜவினர் முழக்கமிட்டனர். அப்போது “ரத்தம் சிந்தி போராடி மீட்டெடுக்கப்பட்ட காஷ்மீர் எங்களுடையது” என தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பேரவை உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
பாஜ பெண் உறுப்பினர் ஷாகுன் பரிஹார் மேஜை மீது ஏறி நின்று முழக்கமிட்டார். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட பாஜ உறுப்பினர்களை சபாநாயகர் உத்தரவுப்படி வௌியேற்ற வந்த அவை காவலர்களுடன் பாஜ உறுப்பினர்கள் கைக்கலப்பில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
The post 370 சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பு விவகாரம்; ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவையில் கடும் அமளி: அவை காவலர்களுடன் பாஜவினர் கைகலப்பு appeared first on Dinakaran.