×

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான ரம்பான் மாவட்டம் பனிஹால் சட்டசபை தொகுதியின் சங்கல்தான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். காஷ்மீர் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது;

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் எங்களது முதல் பணியே அரசு பணிக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துவதான். தினக் கூலிகளின் ஊதியத்தை ஒழுங்குபடுத்துவோம். தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம். அவர்களது ஊதியத்தை உயர்த்துவோம். ஜம்மு காஷ்மீரில்அனைவரையும் ஒன்றிணைத்து ஜம்மு காஷ்மீரில் அரசை நடத்துவதே எங்களின் இலக்காக இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக அரசு துறைகளில் காலிபணியிடங்கள் நிரப்பப்படும். ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொருவரும் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவர்.

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதே எங்கள் முதல் வேலை. தேர்தலுக்கு முன்னதாக மாநில அந்தஸ்து பெற்றுத் தர வேண்டும் என்றும், மாநில அந்தஸ்துடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். ஆனால், பாஜகவுக்கு பிடிக்கவில்லை. பாஜக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை இந்தியா கூட்டணி பெற்றுத் தரும் என உறுதி அளித்தார். மேலும், தேர்தலுக்கு பின்பு நான் இங்கே வர வேண்டும். வெறும் 45 நிமிட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள். இந்த அழகான இடத்தில் குறைந்தபட்சம் 2 – 3 நாள்களாவது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.

 

The post ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Jammu and Kashmir ,Rahul Gandhi ,Jammu and ,Kashmir ,Jammu and Kashmir Union Divisional Assembly ,Dinakaran ,
× RELATED ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்;...