×
Saravana Stores

தமிழ்நாட்டில் உள்ள 20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி: பள்ளிக் கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசு பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு அரசு தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வினை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறது.

புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல் கற்பித்தல் நிகழ்வின் ஓர் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46,12,742 மாணவ மாணவிகள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

6,023 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப் பொருள்கள் அனைத்தும் காணொளி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகச் செயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பள்ளிகளில் மேற்கொள்வதற்கு ஏற்கனவே இருந்த 5 மற்றும் 6 Mbps இணைய வேகத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் 46 லட்சம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொளி வாயிலாக கற்பதற்கும் மாணவர்கள் கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொண்டு பாடக் கருத்துக்களை தெளிவாக கற்பதற்கும், உயர்கல்வி வழிகாட்டுதல்களை எளிமையாகப் பெறுவதற்கும், ஆங்கிலத்தில் மொழிப் புலமை பெற மொழி ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கும், கணிப்பொறி சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.

தமிழ்நாடு அரசு BSNL நிறுவனத்துடன் இணைந்து இணையதள வசதியினை ஏற்படுத்தி வருகிறது, தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்-பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கு ஜுன் மாத இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மன நிலையோடு கல்வி கற்பார்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்ள 20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி: பள்ளிக் கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of School Education ,Chennai ,School Education Department ,
× RELATED பள்ளிகளை ஆய்வு செய்யாத 145...