×

மறுகட்டுமான திட்டத்தில் டிசம்பருக்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 7212 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: முதல்வர் உத்தரவுக்கிணங்க வாரியத்தின் மூலம் கடந்த 30-40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தரத்தை கண்டறிய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின்படி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ராஜாதோட்டம், வேம்புலி அம்மன் கோயில் தெரு, சுபேதார் கார்டன், டாக்டர் தாமஸ் சாலை, வன்னியபுரம், எம்.எஸ் நகர், திருவொற்றியூர் கிராம சாலை, காக்ஸ் நகர், செட்டித் தோட்டம், அப்பாவு நகர் சுப்புபிள்ளை தோட்டம், கொய்யா தோப்பு, பெரிய பாளையத்து அம்மன் கோயில், கோட்டூர்புரம், என்என் நகர் சிந்தாதிரிப்பேட்டை, காந்தி நகர், நாட்டான் தோட்டம், கங்கை கரை புரம் ஆகிய 17 திட்டப்பகுதிகளும் புறநகர் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் நகர், கரூர் மாவட்டத்தில் குழந்ததை கவுண்டன்பாளையம் மற்றும் மதுரை மாவட்டத்தில் சுப்பரமணியபுரம் ஆகிய 3 திட்டப்பகுதிகளும் ஆக மொத்தம் 20 திட்டப்பகுதிகளில் ரூ.1223.62 கோடி மதிப்பீட்டில் 7212 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு ஜூலை முதல் டிசம்பர் 2025க்குள் படிப்படியாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் கே.எம். சரயு, வாரிய செயலாளர் நா.காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மறுகட்டுமான திட்டத்தில் டிசம்பருக்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Tha. Mo. Anbarasan ,Chennai ,Tamil Nadu Urban Housing Development Board ,Mo. Anbarasan ,Tamil Nadu Urban Habitat Development Board ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு