பவானி: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வணிகர் தின உரிமை முழக்க மாநாடு ஈரோடு அருகே டெக்ஸ்வேலியில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்றார். வணிகக் கொடியை ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில், கோவை மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் ஏற்றி வைத்தார்.அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மாநாட்டை தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர் வெள்ளையன், மாநில துணை தலைவர் தேவராஜா, நீலகிரி மாவட்டத் தலைவர் பரமேஷ்வரன், மாநில இணைச் செயலாளர் ராஜகோபால் ஆகியோருக்கு வ.உ.சி விருதும், பொள்ளாச்சி மாவட்டத் துணைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், கோவை மாவட்டச் செயலாளர் கணேசன், திருப்பூர் மாவட்ட ஆலோசகர் துரைசாமி ஆகியோருக்கு வணிக செம்மல் விருதும், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநில பொருளாளர் ஹாஜி சதக்கத்துல்லா 23 தீர்மானங்களை வாசித்தார். அதன் விவரம் வருமாறு: உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி கடைகள் மற்றும் அறநிலையத்துறை கடை வாடகை முரண்பாடுகள் நீக்கம், பெயர் மாற்றம் செய்திட வேண்டும். வணிகர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப நல நிதி மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை மறுசீராய்வு செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து ஆயுள் உரிமமாக அறிவிக்க வேண்டும். சாலையோர கடைகளை முறைப்படுத்திடவும், அபராதம் மட்டும் தண்டனைச் சட்டங்களில் மாற்றம் செய்திடவும் வேண்டும். ஆன்லைன் விற்பனையை தடை செய்திட வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டு ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்திட வேண்டும். ஜவுளித்துறைக்கு அவசியமான நூல் மற்றும் மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ பணிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மீண்டும் கடைகளைத் திருப்பி அளித்து, முழுமை பெறாத திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
வேளாண் இடு பொருள்களான விதைகள், உபகரணங்கள், உரம், பூச்சி மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சம் என உயர்த்திட வேண்டும். டீசல், பெட்ரோல் மற்றும் எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து விலையேற்றத்தை தடுக்க வேண்டும். சமையல் எரிவாயு அடிக்கடி விலையேற்றம் செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வணிகர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஜி.ஜெ.பிரபாகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், மாவட்ட செயலாளர் ஏ.சேக் முகைதீன், பொருளாளர் ஏ.சத்தியரீகன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் கொரட்டூர் ராமச்சந்திரன், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன், மாவட்ட செயலாளர் ஏ.தேசிகன், மாவட்ட பொருளாளர் ஜெ.சின்னவன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
The post தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சம் வேளாண் இடு பொருட்களுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்: வணிகர் சங்க மாநாட்டில் தீர்மானம் appeared first on Dinakaran.