×

முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா வெ.இண்டீஸ் மோதல்

பிரிட்ஜ்டவுன்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டொமினிகா, விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால், அந்த போட்டி டிராவில் முடிந்தது.

அடுத்து இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு தயாராகும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இந்த தொடரை இந்தியா மிகுந்த முனைப்புடன் அணுகுகிறது. அதே சமயம் உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை துடைத்தெறியும் வகையில், சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக, மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கும் அதிரடி பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மயர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். கென்சிங்டன் ஓவல் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிராஜ், மாலிக், ஷர்துல், உனத்கட் ஆகியோர் விக்கெட் வேட்டையில் அசத்தலாம்.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், விராத் கோஹ்லி, ஷுப்மன் கில், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், முகேஷ் குமார்.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பாவெல் (துணை கேப்டன்), அலிக் அதனேஸ், யானிக் காரியா, கேசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சிங்க்ளேர், ஒஷேன் தாமஸ்.

* 2019ல் சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியில் தோற்ற பிறகு, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியே வென்றுள்ளது.

* ஒருநாள் போட்டிகளில் 5000 ரன் சாதனை மைல் கல்லை எட்டும் 11வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையைப் பெற கேப்டன் ஷாய் ஹோப் இன்னும் 171 ரன் எடுக்க வேண்டும்.

* 200 விக்கெட் சாதனை நிகழ்த்த ஜடேஜாவுக்கு இன்னும் 7 விக்கெட் தேவை. கபில் தேவுக்கு பிறகு (3883 ரன், 253 விக்கெட்) 2000 ரன் மற்றும் 200 விக்கெட் வீழ்த்தும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு காத்திருக்கிறது.

The post முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா வெ.இண்டீஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,Indies ,Bridgetown ,West Indies ,Kensington Oval ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய...