×

இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி.சிங்..11 மாத ஆட்சியில் மகத்தான சாதனைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,:”வி.பி.சிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலை அமைப்பதற்கான மகத்தான வாய்ப்பு கிடைத்தது எண்ணி மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகிறேன்.இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி.சிங்.கலைஞர் நினைவிடம் உள்ள கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில கல்லூரியிலேயே அவரது நண்பரான வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங்குக்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால் தந்தை வீடு தமிழ்நாடு. வி.பி.சிங்குக்கு சிலை அமைத்ததன் மூலம் நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டியுள்ளோம்.

வி.பி.சிங் பற்றியும் அவரது தியாக வாழ்க்கை பற்றியும் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.ஜமின் குடும்பத்தில் பிறந்து ஆடம்பர வாழ்க்கை கிடைத்தாலும் காந்தி இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்காக பாடுபட்டவர் வி.பி.சிங்.ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டியவர் வி.பி.சிங். வி.பி.சிங்குக்கு சிலை அமைப்பதை திராவிட மாடல் அரசின் கடமையாக கருதுகிறோம்.பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று சமூக நீதி கொள்கையில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். பிரதமராக வி.பி.சிங் பதவி வகித்தது 11 மாதம்தான், ஆனால் அவர் செய்த சாதனை மகத்தானது.

11 மாத ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் வி.பி.சிங். வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.சமூகநீதி பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அநீதி உள்ளதோ அதை தீர்க்க வேண்டிய மருந்துதான் சமூகநீதி.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். இதை கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்க வேண்டும். .வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது.,”இவ்வாறு பேசினார்.

The post இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதாமகன் வி.பி.சிங்..11 மாத ஆட்சியில் மகத்தான சாதனைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!! appeared first on Dinakaran.

Tags : India ,V. B. Singh ,K. Stalin ,Chennai ,Former ,V. B. The Singh ,Tamil Nadu ,
× RELATED பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்