×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி அமோகம்; சங்கரன்கோவிலில் இருந்து வெளிநாடுகளுக்கு ‘வத்தல்’ ஏற்றுமதி அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் இருந்து வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் வத்தல் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் விவசாயம் மிக பிரதான தொழில் ஆகும். விவசாயிகள் அதிகம் நிறைந்துள்ள பகுதி என்பதால் சங்கரன்கோவிலில் கமிஷன் மார்க்கெட்டுகள் அதிகம் உள்ளது. சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் அனைவரும் தாங்கள் விளைவிக்கும் வத்தல், பருத்தி, கடலை உள்ளிட்ட பொருட்களை சங்கரன்கோவில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கமிஷன் கடைகள் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள முக்கியமான வத்தல் மார்க்கெட்டுகளில் சங்கரன்கோவில் வத்தல் மார்க்கெட் ஒன்று. இந்த மார்க்கெட்டிற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வத்தல் கொண்டு வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து தமிழகத்தில் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், மலேசியா, கோலாலம்பூர், அரபு நாடுகளுக்கும் அதிக அளவில் வத்தல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வத்தல் சாகுபடி அமோகமாக உள்ளது. இதனால் சங்கரன்கோவில் மார்க்கெட்டிற்கு சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மூடை வரை வத்தல் வரத்து இருக்கிறது.

மேலும், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசகம் ஆகிய மாநிலங்களில் வத்தல் சாகுபடி எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இங்கிருந்து தான் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனால் சங்கரன்கோவில் வத்தல் மார்க்கெட்டின் ஒரு குவிண்டாலின் விலை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரை விற்பனை ஆகி வருவதாக கூறுகின்றனர். ஆனால், சில நேரங்களில் விலை குறைந்து 15 ஆயிரம் வரை விற்பனை ஆகி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிப்புக்கு பின் கடைகள் குறைந்தன
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சங்கரன்கோவிலில் கமிஷன் கடைகள் தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, அம்மன் சன்னதி, கழுகுமலை ரோடு ஆகிய பகுதிகளில் அதிகமாக அமைந்துள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு காலத்திற்கு முன் கமிஷன் கடைகள் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சுமார் 40 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியில் வத்தல், பருத்தி, நிலக்கடலை, தானியங்கள் ஆகியவை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு, சீசன் நேரங்களுக்கு ஏற்ப, விற்பனை நடைபெறும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்னர், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வத்தல் தொழிலில் ஏற்றுமதியில் எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாக நடந்து வருகிறது’ என்றனர்.

ஏலத்தில் பழைய நடைமுறை கடைப்பிடிக்கும் வியாபாரிகள்
வத்தல் மார்க்கெட்டில் துண்டுகளை கொண்டு, கைகளை மறைத்தவாறு ஏலம் எடுக்கும் பழங்காலத்து நடைமுறை இருப்பதை இன்றும் பார்க்க முடிகிறது. ஏனென்றால் ஏலத்தில் 5க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றாலும், ஒருவர் தான் ஏலம் எடுப்பார். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் பலர் ஏலம் கேட்கும் போது விலை கூட வாய்ப்புள்ள சூழ்நிலை காரணமாகத்தான் இதே முறைப்படி தான் இன்றளவும் இங்கு ஏலம் எடுத்து வரப்படுவதாக கூறப்படுகிறது.

The post நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி அமோகம்; சங்கரன்கோவிலில் இருந்து வெளிநாடுகளுக்கு ‘வத்தல்’ ஏற்றுமதி அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,Sankarankovil ,Sankarankoil ,Dinakaran ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்