×

2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசும் போது,‘எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பொதுவான துணைப்பெயரைக் கொண்டுள்ளனர்?’ என்றார். இதை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ பூர்னேஷ் மோடி சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஏப்ரல் 3ம் தேதி ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றமம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி ராகுல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து சூரத் கூடுதல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரியும் ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்போது ராகுல் காந்தி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில்,‘‘ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் மீள முடியாத இழப்புகளை அவர் சந்தித்து வருகிறார். குறிப்பாக வயநாடு மக்களவை தொகுதிக்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் பாதிக்கப்படுவதால் அந்த தொகுதி மக்களும் சிரமங்களை சந்திக்கின்றனர். இவை அனைத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 2ம் தேதி ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதில்,‘‘ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முன்வைக்கும் காரணங்கள் சரியானதாக இல்லை. கீழமை நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. எனவே ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டதற்காக சிறப்பு சலுகையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ராகுல் காந்தி ஏற்கனவே இந்தியா முழுவதும் 10 கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார். எனவே கீழ் நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானது, சரியானது மற்றும் சட்டபூர்வமானது. அவரது தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு, தற்போதைய குற்றவியல் சீராய்வு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவதற்கு தகுதியானது. அதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

* 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் போட்டியிட முடியுமா?
ராகுல் மீதான 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை பெற வேண்டும். இல்லை என்றால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
* ராகுல் காந்தி வரம்புக்குள் வராத காரணங்களை சுட்டிக்காட்டி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கூறுகிறார். அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது.
* ஒரு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பது என்பது விதிவிலக்கு தானே தவிர அது ஒன்றும் கட்டாயமாக்கப்பட்ட விதி கிடையாது.
* இந்த வழக்கில் முன்னதாக தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பிறகும் ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என்று ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக வீர் சாவர்க்கரின் பேரன் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்து இருக்கிறார்.
* ராகுல் காந்திக்கு எதிராக பூர்னேஷ் மோடி தொடர்ந்தது போன்று, அதே கோரிக்கை கொண்ட பத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. அதனையும் இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
* குறிப்பாக எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அரசியலில் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.
* இந்த வழக்கின் தண்டனையை நிறுத்தி வைக்காதது என்பது ராகுல் காந்திக்கு எந்தவித அநீதியையும் ஏற்படுத்தி விடாது.
* விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானது மட்டுமில்லாமல் சரியானது மற்றும் சட்டப்பூர்வமானது ஆகும்.
* ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க சரியான, நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.
* ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட நீதிமன்றம் முடிந்தவரை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.

* அவதூறாக பேசுவது ராகுலின் வழக்கம்: பா.ஜ குற்றச்சாட்டு
முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,’ ராகுல் இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க மறுத்து பொறுப்பற்ற முறையில் திமிராக நடந்து கொண்டார். இப்படி நடந்து கொண்டு மக்களையும், அரசு அமைப்புகளையும் அவதூறு செய்து வந்ததால், சட்டம் தண்டித்துள்ளது. இன்னும் ராகுல் மீது ஏழு-எட்டு அவதூறு வழக்குகள் உள்ளன. புகழ்பெற்ற நபர்களையும், அமைப்புகளையும் அவதூறாக பேசுவது ராகுலின் வழக்கம். வீர் சாவர்க்கரையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் அவர் அவதூறாக பேசி உள்ளார். அவர் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்று அவர் நம்புவது அவரது திமிர்’ என்றார்.

* அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து போராடுவோம்: கார்கே
குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: ராகுல் காந்தி எப்போதும் உண்மைக்காகப் போராடி வருகிறார், எதிர்காலத்திலும் தொடர்ந்து போராடுவார். அரசியல் சதியின் ஒரு பகுதியாக பொய்களைப் பயன்படுத்தி ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கி, அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கியது. ஊழலில் மோடியின் இரட்டை வேடத்தை நாடு இப்போது நன்கு உணர்ந்துள்ளது. இந்த அரசியல் சதிக்கு காங்கிரஸ் தலைவர்களோ, தொண்டர்களோ யாரும் பயப்பட வேண்டாம். அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் தொடர்ந்து போராடுவோம். சத்யமேவ ஜெயதே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

* உச்சநீதிமன்றத்தில் முறையீடு காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர், கே.சி.வேணுகோபால், ‘‘இன்னும் ஒரு வழி உள்ளது… உச்ச நீதிமன்றம். பார்க்கலாம். காங்கிரஸ் கட்சியும் அந்த விருப்பத்தை நாடும்” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், ராகுல் காந்தியின் வக்கீலுமான அபிஷேக் சிங்வி கூறுகையில்,’ ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. ஆனால் எதிர்பாராதது அல்ல. இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு. மக்கள் நீதிமன்றமே அனைத்தையும் முடிவு செய்யும். மோடி அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்’ என்று சிங்வி கூறினார்.

* போர் முடியவில்லை பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது: போர் இன்னும் முடியவில்லை. இந்த திமிர்பிடித்த ஆட்சிக்கு எதிராகவும், உண்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ராகுல் காந்தி போராடி வருகிறார். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் மக்களின் நலன்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படக்கூடாது என்று திமிர்பிடித்த ஆட்சி விரும்புகிறது. அவரைத் தடுக்க அனைத்து தந்திரங்களையும் திமிர்பிடித்த ஆட்சி பயன்படுத்துகிறது. ஆணவக்கார இந்த ஆட்சி, உண்மையை அடக்க ஒவ்வொரு தந்திரத்தையும் முயற்சிக்கிறது. அது பண பலம், தண்டனை, பாகுபாடு, வஞ்சகம் உள்ளிட்ட திசைதிருப்பும் அனைத்து வழிகளையும் பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ராகுல் வழக்கு கடந்த வந்த பாதை
மோடி குடும்பப்பெயர் தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு கடந்து வந்தபாதை:
2019 ஏப்ரல் 13: கர்நாடகாவின் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி, ‘‘நிரவ் மோடி, லலித் மோடி என எல்லா திருடர்களுக்கும் ஏன் மோடி என்று பொதுவான குடும்பப்பெயராக இருக்க வேண்டும்?” என்று பேசினார்.
2019 ஏப்ரல் 15: சூரத்தின் பாஜ எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி, ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
2019 ஜூலை 7: சூரத் பெருநகர நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முதல் முறையாக ஆஜரானார்.
2023 மார்ச் 23: சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2023 மார்ச் 24: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
2023 ஏப்ரல் 2: ராகுல் காந்தி சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனுடன் தண்டனைக்கு தடை கோரிய மனுவும் நிலுவையில் உள்ளது.
2023 ஏப்ரல் 20: சூரத் அமர்வு நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் தண்டனையை நிறுத்த மறுத்தது.
2023 ஏப்ரல் 25: கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
2023 ஜூலை 7: தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Gujarat High Court ,New Delhi ,Gujarat ,
× RELATED எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...