×

அறியாமை நோய்க்குக் கேள்வியே மருந்து

இஸ்லாமிய வாழ்வியல்

அன்னை ஆயிஷா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்கும்போது, அதை நன்கு புரிந்துகொள்ளும்வரை, அதை ஒட்டி மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். “அறியாமை நோய்க்குக் கேள்வியே மருந்து” என்பது அழகான ஒரு பழமொழி. நபித்தோழர்கள் பலரிடம் இப்படிக் கேள்வி கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளும் பண்பு இருந்தது. விதண்டாவாதக் கேள்வி களைத் தவிர்த்து, உண்மையாகவே செய்தி களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய வாழ்வியலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் எத்தனை கேள்விகள் கேட்டாலும் நபிகளாரும் சளைக்காமல் விடை சொல்வார்.

ஒரு சுவையான நிகழ்வு. நபிகளார் பள்ளிவாசலில் தோழர்கள் புடைசூழ அமர்ந்திருந்தபோது, ஒரு மனிதர் ஒட்டகத்தில் வந்து இறங்கினார். பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் ஒட்டகத்தைக் கட்டிவைத்துவிட்டு, அங்குள்ள மக்களிடம், “முஹம்மத் யார்? எங்கே இருக்கிறார்?” என்று விசாரித்தார்.

“அதோ, அங்கு சாய்ந்து அமர்ந்திருக்கும் வெள்ளை நிற மனிதர்தாம் முஹம்மத்” என்று மக்கள் கூறினர். அந்த மனிதர் நேரடி யாக நபிகளாரிடம் வந்து, “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில வினாக்கள் கடுமையாகவும் இருக்கும். கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

“உங்கள் மனதில் பட்டதைத் தயங்காமல் கேளுங்கள்” என்றார் நபிகளார். இதோ, அந்த உரையாடல்.
“உங்களுடைய இறைவன் மீதும், உங்களுடைய முன்னோர்களின் இறைவன் மீதும் ஆணையிட்டுக் கேட்கிறேன். உங்களைத்தான் மனித இனம் முழுவதற்கும் இறைவன் தூதராக அனுப்பினானா?”
“ஆம். இறைவன் சாட்சியாக.”
“இறைவனின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன். பகலிலும் இரவிலும் ஐந்து வேளை தொழவேண்டும் என்று உங்களுக்கு இறைவன் கட்டளையிட்டிருக்கிறானா?”
“ஆம். இறைவன் சாட்சியாக.”

“இறைவனை முன்வைத்துக் கேட்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்று இறைவன் உங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கிறானா?”
“ஆம். இறைவன் சாட்சியாக.”
“இறைவனுக்காகச் சொல்லுங்கள். எங்களில் உள்ள செல்வர்களிடமிருந்து ஜகாத்தைப் பெற்று, எங்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்கும்படி இறைவன் உங்களுக்கு ஆணையிட்டுள்ளானா?”
“ஆம். இறைவன் சாட்சியாக.” (ஆதாரம் – புகாரி 63, மஆலிமுஸ் ஸுன்னா) தாம் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் “ஆம்.. இறைவன் சாட்சியாக, உண்மைதான்” என்று நபிகளார் அளித்த பதில் அந்த மனிதரை மிகவும் கவர்ந்தது. அதற்குப் பிறகுதான் அவர் தாம் யார், தம் குலம் என்ன என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

“என் பெயர் ளிமாம் பின் ஸஅலபா. பனு சஆத் பக்ர் குலத்தைச் சேர்ந்தவன். என் குலத்தின் சார்பாகத் தூதுவனாக வந்துள்ளேன். நீங்கள் இறைவனிடமிருந்து கொண்டுவந்த அனைத்தையும் நம்பி ஏற்கிறேன்” என்றார். ஒரு குலத்தின் பொறுப்பாளர், நபிகளார் பற்றியும் அவருடைய செய்திகள் பற்றியும் எங்கேயோ கேள்விப்பட்டுள்ளார். கேள்விப்பட்ட செய்திகள் உண்மையா என்பதை அறிந்துகொள்ள தொடர்புடையவரையே நேரில் சந்தித்து, வினாக்கள் எழுப்பி, விடைகளைத் தெரிந்துகொண்டு மனநிறைவு அடைகிறார். எத்தனை அழகான வழிமுறை.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

நபிகளார் (ஸல்) கூறினார்: “என்னிட மிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி, அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.

The post அறியாமை நோய்க்குக் கேள்வியே மருந்து appeared first on Dinakaran.

Tags : Aisha ,
× RELATED மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன்...