×

இடுகாடு எரிமேடையை இடித்தவர் மீது நடவடிக்கை கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

செய்யூர்: செய்யூர் அருகே இடுகாடு எரிமேடை மற்றும் சுற்றுச்சுவரை இடித்தவர் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நல்லாமூர் ஊராட்சி கீழ்கரணை கிராமத்தில், ஆதிதிராவிட மக்களுக்கென பல ஆண்டுகளுக்கு முன் தனிநபர் ஒருவர் சுடுகாட்டுக்காக தனது சொந்த இடத்தை இலவசமாக வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் அரசு அதிகாரிகள் இடுகாடு அமைத்து, அந்நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள், இறந்தவர்களை இடுகாடு பகுதியில் எரிப்பது, புதைப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவர், இடுகாடு வழங்கிய இடத்தில் ஒரு பகுதி தனக்கு சொந்தமென கூறி அரசு அதிகாரிகளிடம் எந்தவித அறிவிப்புமின்றி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடுகாடு மற்றும் அதனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரை இடித்து தரைமட்டமாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சித்தாமூர் – செய்யூர் செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ததோடு, அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post இடுகாடு எரிமேடையை இடித்தவர் மீது நடவடிக்கை கிராம மக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Idugadu pyre ,Seyyur ,Dinakaran ,
× RELATED தண்டரை ஊராட்சியில் ரூ.8 லட்சம் செலவில்...