×

ஐசிசி உலக கோப்பை அட்டவணை வெளியீடு அக்.5ல் அகமதாபாத்தில் தொடக்கம்: அக். 15ல் இந்தியா-பாக். மோதல்

* சென்னையில் 5 போட்டிகள் மும்பை: இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் அக்.5ம் தேதி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியும் நவ.19ம் தேதி இதே ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ளன. உலக கோப்பை சூப்பர் லீக் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய டாப் 8 அணிகள் நேரடியாக உலக கோப்பையில் விளையாட உள்ளன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது.

லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றில் விளையாட உள்ளன. அந்த சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்து பைனலுக்கு முன்னேறும் அணிகள், இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளின் தலைவிதியும் இந்த தகுதிச்சுற்றின் மூலமாகவே நிர்ணயிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும், லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத உள்ளன. அதன்படி ஒவ்வொரு அணியும் 9 லீக் ஆட்டங்களில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நவ.15, 16 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும், நவ.19ல் பைனலும் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை, மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஐசிசி தலைமை செயலதிகாரி ஜெஃப் அலார்டைஸ், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, முன்னாள் நட்சத்திரங்கள் வீரேந்திர சேவக், முத்தையா முரளிதரன் (இலங்கை) ஆகியோர் இதில் கலந்து கொண்டு அட்டவணையை வெளியிட்டனர். போட்டிகள் அகமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, புனே, லக்னோ, தர்மசாலா, ஐதராபாத் என 10 மைதானங்களில் நடைபெற உள்ளன. சென்னையில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை அக்.15ம் தேதி அகமதாபாத்தில் பகல்/இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

* மொத்தம் 46 நாட்களில் 45 லீக் ஆட்டங்கள் மற்றும் 3 நாக்-அவுட் ஆட்டங்கள் நடக்க உள்ளன.

* அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு ‘ரிசர்வ்’ நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

* மொத்தம் 6 நாட்களில் பகல், பகல்/இரவு என ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

* பகல் போட்டி காலை 10.30க்கும், பகல்/இரவு ஆட்டங்கள் பிற்பகல் 2.00 மணிக்கும் தொடங்கும்.

* இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால், அந்த ஆட்டம் மும்பையில் நடத்தப்படும். அதே சமயம், அந்த போட்டியில் எதிரணியாக பாகிஸ்தான் இருந்தால் போட்டி கொல்கத்தாவில் நடக்கும்.

* லீக் சுற்றில் இந்திய அணி மொத்தமுள்ள 10 மைதானங்களில் 9ல் விளையாட உள்ளது. பாகிஸ்தான் அணியின் லீக் ஆட்டங்கள் 5 மைதானங்களில் மட்டுமே நடைபெறும்.

* இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்.8ம் தேதி ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.

* உலக கோப்பை பயிற்சி ஆட்டங்கள் செப்.29 முதல் அக்.3 வரை ஐதராபாத், திருவனந்தபுரம், கவுகாத்தியில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

The post ஐசிசி உலக கோப்பை அட்டவணை வெளியீடு அக்.5ல் அகமதாபாத்தில் தொடக்கம்: அக். 15ல் இந்தியா-பாக். மோதல் appeared first on Dinakaran.

Tags : ICC World Cup ,Ahmedabad ,India ,Pakistan ,Chennai Mumbai ,World Cup ODI ,Dinakaran ,
× RELATED ராகுல் மீது மறைமுக தாக்கு;...