×
Saravana Stores

தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘கலைஞரின் கனவு இல்லம் திட்டம்’ தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இ்த்திட்டத்தின் நோக்கம்.

அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பி.பொன்னையா வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். வீடுகள் அனைத்தும் 360 சதுரஅடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக, பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.

ஓலை அல்லது அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக் கூடாது. ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும். மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமானம் போன்றவை அனுமதிக்கப்படுகிறது.
குடிசையில் வாழ்பவர்கள், கேவிவிடி மறு சர்வே பட்டியலில் உள்ளவர்கள், அனைவருக்கும் வீடு சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டு பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும், கேவிவிடி சர்வே மற்றும் புதிய குடிசைகள் சர்வே விவரங்கள் வரும் 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களையும் சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் பட்டியலுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் (ஊரகம்) 25 முதல் 50 வீடுகள் நிலுவையில் இருந்தால் அந்த ஊராட்சி இந்த ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்ல திட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படாது.

அதேபோல், எந்த ஒரு ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் ஊரக வீடுகள் திட்டத்தின் கீழ் பழுதுபார்ப்புக்கு எடுக்கப்பட்டிருந்தால் அந்த ஊராட்சிகளும் இதில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. அந்த அடிப்படையில், வீடுகள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை வட்டம் மற்றும் கிராம அடிப்படையில் தயாரித்து ஊரக வளர்ச்சி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Finance Minister ,Thangam Thannarasu ,Dinakaran ,
× RELATED ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை...