சென்னை: வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம் என அன்புமணி ராமதாஸ் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, உலகின் தவிர்க்க முடியாத சக்தியான மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
மனித வாழ்வில் பெருமை பேசப்படாத கதாநாயகர்கள் பெண்கள் தான். அவர்கள் கொண்டாடப்படவும், போற்றப்படவும், கவுரவிக்கப்படவும், முன்னோடியாக மதிக்கப்படவும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவற்றை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை. அந்த நிலை மாற்றப்பட வேண்டும். பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பார்கள்.
பெண்களை ஆண்களுக்கு அடுத்தப்படியாக வைத்துப் பார்க்கும் மனநிலை விலக வேண்டும். நாட்டையும், வீட்டையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால், அனைத்துத் துறைகளிலும் சாதனைகளை படைத்ததைப் போன்றே இதிலும் சாதிப்பார்கள். எனவே, வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்: அன்புமணி ராமதாஸ் மகளிர் தின வாழ்த்து appeared first on Dinakaran.