×
Saravana Stores

ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்..!!

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி சவுந்தர்ராஜனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் 4,620 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர நிறுவன இயக்குனர் அலெக்ஸ்சாண்டர் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சவுந்தரராஜன் என்பவர் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று நீதிபதி கருணாநிதி விசாரணை செய்தார். இந்த விசாரணையின் போது, ஏற்கனவே சுமார் 89,000 முதலீட்டாளர்களிடம், ரூ. 4,620 கோடி மோசடி செய்துள்ளனர், இதுவரை 16,500 நபர்கள் புகார்கள் அளித்துள்ளனர். 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் சவுந்தர்ராஜனுக்கு ஜாமின் வழங்கினால் வெளிநாடு தப்பி செல்லவும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது.

எனவே அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது. அதுமட்டுமின்றி மீட்கவேண்டிய பணம் அதிகமாக உள்ளது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சவுந்தர்ராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ஹிஜாவு நிதி நிறுவன முக்கிய நிர்வாகியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Special Court ,Jam ,Hijau Financial Institutions ,Chennai ,Jam Manu ,Soundarrajan ,Hijavu Finance ,Special Court of Chennai ,Chief Executive ,Dinakaran ,
× RELATED வருமானத்திற்கு அதிகமாக சொத்து...