நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் 15 வீடுகள் மாவட்டத்தில் இடிந்து விழுந்துள்ள நிலையில் 2ம் நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாயின. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சரிந்தும் பாதிப்புகள் ஏற்பட்டன.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அணை பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக 15 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன. இதில் முகிலன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாகம்மாள், வேம்பனூர் கிழக்கு நடுத்தெருவை சேர்ந்த ஜோசப், பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வம் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. வீரமார்த்தாண்டன் புதூர் பகுதியில் யேசுமணி என்பவரது வீடும், தாழக்குடியில் சுகேந்திரன் வீடுகளும் சேதமடைந்தது.
மணவிளை பகுதியில் இசக்கிவேல் என்பவது வீடு, இடிந்து விழுந்தது. மிடாலம் பகுதியில் புளியமர கிளைகள் விழுந்தததில் அந்த பகுதி வீடுகள் மீது விழுந்தது. கொல்லங்கோடு பகுதியில் ஜோசப் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. கீழ்மிடாலம் பகுதியில் சகாய விஜயன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. பரக்குன்று பகுதியில் சுரேந்திரகுமார் என்பவரது வீடு, பொன்மனை அக்கன்விளை பகுதியில் வசந்தா என்பவரது வீடு ஆகியன இடிந்து விழுந்துள்ளது. அந்த வகையில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3, தோவாளையில் 7, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், தாலுகாக்களில் தலா ஒரு வீடும், கிள்ளியூரில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. மாவட்டத்தில் 2 நாட்களில் மொத்தம் 9 இடங்களில் மரம் முறிந்து விழுந்ததுடன் 3 இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.
இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும், சாரல் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக மயிலாடியில் 110.2 மி.மீ மழை பெய்திருந்தது. இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30.80 அடியாகும். அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 274 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 57.85 அடியாகும். அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 75 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.17 அடியாக நீர்மட்டம் இருந்தது. 344 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 14.27 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 207 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
பொய்கையில் 9.30 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 24.61 அடியாகும். அணைக்கு 156 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 10 அடியாகும். அணைக்கு 11.9 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 8.6 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் தொடர் மழையால் மளமளவென நிரம்பி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து காரணமாக அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு 2வது நாளாக இன்றும் (4ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான பகுதிகளில் 0.5 முதல் 2.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. எனவே கடலோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில வேளையில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
The post மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை; குமரி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு: 15 வீடுகள் இடிந்து விழுந்தன appeared first on Dinakaran.