×

குறைதீர் கூட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை

*அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர் : விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான விவசாயிகள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் பதிலளித்து பேசினார். அதன்படி, பாதிரிப்பட்டி பகுதியில் ஆற்றுப்பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை அமைத்து தருவது, தென்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிளுக்கு கடனுதவி வழங்குவது, க.பரமத்தி பகுதியில விவசாயிகளுக்கு விதை நெல் கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தி தருவது, கரூர் – கோவை நெடுஞ்சாலையில் முக்கிய பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தருவது, கோரக்குத்தி பகுதியில் உப்பிடமங்கலம் முதல் சேங்கல் வரை தார்ச்சாலை அமைப்பது, இதே பகுதியில் மக்கள் பயன்படுத்தும் வகையில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுப்பது போன்றவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

ராஜவாய்க்காலில் வடிகால்:மேலும், மாயனூர் கதவணை தொடர்பான கூட்ட அமர்வு நடத்துவது, காசா காலனி பகுதியில் அங்கன்வாடி மையத்துக்கு குடிநீர் வழங்குவது, ஆண்டாங்கோயில் கழிவு வாய்க்கால் தூர்வாருவது, சிங்கிளாபுரம் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கிளை வாய்க்கால் அமைப்பது, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் வாங்கியதற்கு பணம் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்வது, வளையல்காரன்புதூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை சரி செய்து, வடிகால் அமைத்து தருவது போன்றவை தொடர்பாக பதிலளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தாந்தோணி பகுதியில் உள்ள நங்காஞ்சியாறு வாய்க்கால் பகுதியில் மின் இணைப்பு வழங்கி ஆழ்துளை கிணறு அமைத்து தருவது, எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் வடிகால் அமைத்து புனரமைத்து தருவது, மகாத்மா காந்தி தேசிய உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் நீர்வழிப்பாதை சுத்தம் செய்து தருவது, வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேமிப்பதற்கு வழி வகை ஏற்படுத்துவது, வெள்ளியணை பகுதியில் உள்ள ஏரியில் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் வண்டல் மண் எடுப்பது, ராயனூர் பகுதியில் செல்லும் வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்வது குறித்து பதில் அளிக்கப்பட்டது.

உடனடி நடவடிக்கை:தோகைமலை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது, இதே பகுதியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைத்து தருவது, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. விவசாயிகள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் குறித்து காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 81 மனுக்கள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 60 மதிப்பில் ஆடிப்பட்ட காய்கறி விதைகள் விநியோகம், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பில் பவர் டில்லர், வேளாண்மை துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பில் பேட்டரி தெளிப்பான், தார்பாலின் என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், கவிதா, வேளாண் இணை இயக்குநர் (பொ) மணிமேகலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா உட்பட அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

ஸ்டால்களை ஆர்வமுடன் பார்வையிட்ட விவசாயிகள்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு, மாவட்டம் முழுவதுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்திருந்தனர். இதையொட்டி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண் அறிவியல் மையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை போன்ற பல்வேறு துறைகள் சார்பில் விவசாயம் சார்ந்த துண்டு பிரசுரங்களுடன் ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. இதனை விவசாயிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும், விவசாயிகளுக்கு கையேடுகளும் வழங்கப்பட்டன.

The post குறைதீர் கூட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED சாலைகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல கூடாது