சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று பிறந்த 2024ம் ஆண்டு புத்தாண்டை பொதுமக்கள் மிக எளிமையாக கொண்டாடினர். சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் பெரிய அளவில் கொண்டாட்டம் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதி மக்கள் மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். நள்ளிரவு முதலே பொது இடங்களில் குடும்பத்தினர், நண்பர்கள், இளைஞர்கள் ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருப்பார்கள்.
சரியாக அதிகாலை 12 மணி ஆனதும் ஒவ்வொருவரும் ‘ஹாப்பி நியூ ஹியர்’ என்று கூறி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். வாண வேடிக்கை அமர்களப்படுத்தும். முக்கியமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகளில் ஜோடி ஜோடியாக கலந்து கொண்டு புத்தாண்டை மிக விமரிசையாக வரவேற்கும் வகையில் ஆடல், பாடல், நடனம் என அமர்க்களப்படுத்துவார்கள். இதில் பங்கேற்க நட்சத்திர விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவுகள் செய்யப்படும். இப்படி ஒவ்வொரு புத்தாண்டின்போதும் மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
ஆனால் எல்லா வருடங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழகத்தின் வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த மாதம் 3 மற்றும் 4ம் தேதி மிக்ஜாம் புயல் மழை காரணமாக வரலாறு காணாத மழை பெய்தது. அதிகப்பட்சமாக 75 செ.மீ. வரை மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள், தெருக்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த 4 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு எடுத்த தீவிர மீட்பு நடவடிக்கை காரணமாக அதில் இருந்து படிப்படியாக மீண்டனர்.
ஆனாலும், இப்பகுதி மக்களின் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்ததால் பெரிய சோகத்தில் உள்ளனர். அதேபோன்று, கடந்த 17 மற்றும் 18ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து 36 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. அதிகப்பட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 116 செ.மீ. மழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்ட மக்கள் பெரிய அளவில் பாதித்தனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் மழை ஓய்ந்து இரண்டு வாரங்கள் ஆனாலும் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர முடியாமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். பல இடங்களில் இன்னும் மழை நீர் தேங்கி நிற்கிறது. தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான், 2024ம் ஆண்டு புத்தாண்டு நேற்று அதிகாலை பிறந்தது. மழை வெள்ளத்தால் அதிகளவு பாதித்ததால் மேற்கண்ட 8 மாவட்ட மக்களும் புத்தாண்டை நேற்று கொண்டாடினாலும், வெகுவிமரிசையாக அவர்களால் கொண்டாட முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகளில் பெரிய அளவில் ஆட்டம், பாட்டம் இல்லாமல் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. பல ஓட்டல்களில் குறைந்த அளவு மக்களே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், சென்னையில் புத்தாண்டு என்றால் மெரினா கடற்கரை சாலையில் மக்கள் திரண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால், நேற்று பெரிய அளவில் கடற்கரை சாலையில் கூட்டம் இல்லை. இதனால் பெரிய அளவில் அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் அமைதியாக புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தது.
இதுகுறித்து சென்னை பகுதி இளைஞர்கள் கூறும்போது, ‘‘வழக்கமாக புத்தாண்டை வரவேற்க எங்களது இரு சக்கர வாகனத்தில் சென்னையில் வலம் வருவோம். அதேபோன்று பட்டாசு வெடித்து புத்தாண்டை வரவேற்போம். ஆனால், மழை வெள்ள பாதிப்பில் இருந்து எங்கள் குடும்பத்தினர் இன்னும் மீண்டு வரவில்லை. அதனால் எங்களுக்கும் புத்தாண்டை பெரிய அளவில் கொண்டாட விருப்பம் இல்லை. ஆனாலும், புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்ற காரணத்தால் நண்பர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து, கோயில்களுக்கு சென்று கொண்டாடினோம். அடுத்த புத்தாண்டு இதுபோல் இல்லாமல் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறோம்’’ என்றனர்.
The post மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் உற்சாகம் நட்சத்திர விடுதிகளில் பெரிய அளவில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை appeared first on Dinakaran.