*2 கோடி மக்கள் பார்த்தனர்
விராலிமலை : தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் 40 கணினி அறைகள் அமைக்கப்பட்டு பட்ஜெட் குறித்தான தகவல்களை உடனுக்குடன் பயனாளர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கையடக்க கைப்பேசி மூலம் உடனுக்குடன் அறிந்து கொண்டனர்.
செய்தி மக்கள் தொடர்பு துறையின் இந்த புதிய முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னை தயார்படுத்தி கொள்வதில் தமிழக முதல்வர் முன்னோடியாக திகழ்கிறார் கடந்த காலங்களிலேயே பேப்பர் இல்லாத பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தார்.
அந்தவகையில், தொலைகாட்சி மற்றும் மறுநாள் தினசரி பேப்பர்களில் மட்டுமே மற்ற செய்திகளோடு பட்ஜெட்டையும் பொதுமக்கள் அறிந்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய முயற்சியாக பயனாளர்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பப்பட்டது அனத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 19ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்களை அனைத்து தரப்பு மக்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் தலைமை செயலகத்தில் 40 கணினிகள் கொண்ட கண்காணிப்பு அறை அதற்குரிய தொழில்நுட்ப பணியாளர்களுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டு பட்ஜெட் குறித்த சிறப்பு அம்சங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது.
இதில், நிதி நிலை அறிக்கை வெளியான உடனுக்குடன் அதன் சிறப்பம்சங்கள் குறித்து வாட்ஸ் அப் செயலி மூலம் சுமார் 2 கோடியே 8 லடசத்து 76 ஆயிரத்து 480 பேர்களுக்கு கைப்பேசி குறுச்செய்திகளாக அனுப்பட்டு அது 1 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
மேலும், நிதிநிலை அறிக்கை வெளியான உடனுக்குடன் அதன் சிறப்பம்சங்கள் குறித்து தமிழில் 93 சமூக ஊடக விளம்பர அட்டைகள், ஆங்கிலத்தில் 37 சமூக ஊடக விளம்பர அட்டைகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இச்சமூக ஊடக விளம்பராட்டைகள், குறும்படங்கள் வலையொலி (யூ டியூப்),முகநூல்(பேஸ் புக்),படவரி(எக்ஸ்),இணையவழி, வாட்ஸ் அப் குறும்படங்களாகவும், சமூக ஊடக விளம்பர அட்டைகளாகவும் தயார் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
நிதி துறையும், செய்தி மக்கள் தொடர்பு துறையும் இணைந்து இந்த புதிய முயற்சியாக வரலாற்றில் முதல் முறையாக உடனுக்குடன் நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களின் செய்திகளை அனைவருக்கும் பகிர்ந்து அரசின் கவனத்தை ஈர்ப்பதில் இரண்டு துறையினரும் வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
The post அரசின் புதிய முயற்சி வாட்ஸ்அப்பில் தமிழக பட்ஜெட் வெளியீடு appeared first on Dinakaran.