×

பேரிடரிலும் அரசியல் செய்பவர்கள் பற்றி கவலையின்றி மக்கள் நலன் காக்க அரசு பாடுபட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பேரிடரிலும் அரசியல் செய்யும் மனம் படைத்தவர்கள் பற்றி கவலைப்படாமல் மக்கள் நலன் காக்க அரசு பாடுபட்டு வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : வரலாறு காணாத கனமழையை ,சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4ம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் அதிகாலைக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான்.

2015ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீரை முறையான வகையில் திறக்காமல், ஒரே இரவில் அளவுக்கதிமாகத் திறந்துவிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளத்தின்போது சென்னைக்குள்ளேயே வாகனங்கள் வர முடியாத நிலை இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்த சில மணி நேரங்களிலேயே செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து சீரானது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் சீரான நிலைதான்.

அதே நேரத்தில், சென்னைப் புறநகரின் ஏரிகள் சூழ்ந்த பகுதிகளிலும், கடல் மட்டத்துக்கு இணையான சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியிருந்ததை அறிந்து, அங்குள்ள மக்களுக்கு உதவிடவும், அவர்களை மீட்கவும், அந்தப் பகுதியில் வெள்ளநீரை வடியச் செய்து, இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட சட்டமன்ற உறுப்பினர்களுடன் மேயர், சேர்மன், கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் களத்தில் நின்றனர்.

அவர்களுடன் கழகத்தினர் துணை நின்றனர். உங்களில் ஒருவனான என்னுடைய வழிகாட்டுதலில் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா தலைமையில் ஐ.டி.விங் நிர்வாகிகள் வார் ரூம் அமைத்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து, ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டனர்.

மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல. பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு, ரூ.6000 நிவாரணம் அறிவித்து, அதற்கானப் பணிகளை முன்னெடுத்துள்ளது.

திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும் நிலையில், திமுகவின் அரசியல் கொள்கையான பேரறிஞர் அண்ணாவும் கலைஞரும் முன்னிறுத்திய மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும். முந்தைய அடிமை ஆட்சியாளர்களால் பறிபோன மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உரிமைகள் கிடைத்திட 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்களமாக நிச்சயம் அமைந்திடும்.

அந்தக் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, சேலத்தில் உதயநிதி தலைமையில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது. பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம். களம் எதுவாயிலும் கலங்காது நிற்போம். இளைஞரணி மாநாடு வெல்லட்டும். அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மிக்ஜாம் புயலின் பாதிப்புகளைப் பார்வையிட வந்த ஒன்றிய குழுவினரும், அரசியல் மாச்சரியமின்றி திராவிட மாடல் அரசின் பணிகளைப் பாராட்டியிருப்பது நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழ் மட்டுமல்ல, அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார் அறை என்றால் மிகையல்ல.

The post பேரிடரிலும் அரசியல் செய்பவர்கள் பற்றி கவலையின்றி மக்கள் நலன் காக்க அரசு பாடுபட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Govt ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...