×

பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கியது: டிப்பர் லாரிகளுக்கு மட்டும் அனுமதி

பள்ளிகொண்டா: அரசு சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில் பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் மணல் குவாரி நேற்று முதல் செயல்பட தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி அடுத்த பெருமுகையில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. தற்போது அங்கு டெண்டர் முடிவடைந்து விட்ட நிலையில் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி மணல் குவாரி அமைக்க அரசு சார்பில் டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 8 மாதமாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இங்கு மணல் குவாரி அமைக்க கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்த நிலையில், பாலாற்றில் மணல் குவாரி அமைக்க ஐகோர்ட் தற்காலிக தடை விதித்திருந்தது.

இது ஒருபுறம் இருக்க மணல் குவாரி அமைக்கும் பணிகள் எந்தவித தடையில்லாமல் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு குவாரிக்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில் பாலாற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் குவாரியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதனை நேற்று முதல் பில்லிங் செய்யப்பட்ட டிப்பர் லாரிகளுக்கு மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், இந்த குவாரியில் மாட்டு வண்டி களுக்கு அனுமதி கிடையாது எனவும், ஒரு டிப்பர் லாரியில் 3 யூனிட் மணல் மட்டுமே லோடு செய்யப்படும் எனவும் குவாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post பள்ளிகொண்டா அருகே பாலாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட தொடங்கியது: டிப்பர் லாரிகளுக்கு மட்டும் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Palar ,Pallikonda ,Palakonda ,Palalikonda ,trucks ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்…...