×

ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லையா? தவறான தகவல் தந்தால் ரூ50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்: பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில அரசு, மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதில் வந்தது. முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருகிறது. இதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறி விட்டது. எனவே, சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி வி.எஸ்.கங்காபுர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், ‘எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை’ என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு வரும் 31ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

The post ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லையா? தவறான தகவல் தந்தால் ரூ50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்: பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...