- கவர்னர்
- தேநீர் விருந்து
- குடியரசு தினம்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- RN
- ரவி
- காந்திஜி
- கட்சி
- தின மலர்
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், காந்தியடிகளை அவமதிக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதால், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதேபோன்று, கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிவித்துள்ளனர். கவர்னரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ேதநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்பி பாலகங்கா ஆகியோர் பங்கேற்றனர். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜ சார்பில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, துணை தலைவர் கரு. நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்ற நிலையில், தேமுதிக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அலி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், தியாகிகள் கலந்து கொண்டனர். ‘வளர்ச்சி அடைந்த இந்தியா-2047’ என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து, சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய நிறுவனங்கள், தனிநபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலையை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். சமூக சேவை (நிறுவனங்கள்) பிரிவில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அமைப்பு நிறுவனத்துக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு(நிறுவனங்கள்) பிரிவில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பசுமை அமைதி காதலன் என்ற நிறுவனத்துக்கும் ₹5 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திகளில் தீயணைப்பு துறை முதலிடத்தையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 2வது இடத்தையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை 3வது இடத்தையும் பிடித்தது. இதற்கான விருதை கவர்னரிடம் இருந்து உள்துறை செயலாளர் அமுதா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சிறந்த முறையில் கலை நிகழ்ச்சியை நடத்திய ராணி மேரி கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, சோகா இகேதா கல்லூரிக்கும், ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளிக்கும், கொடிநாள் வசூலில் சாதனை படைத்த மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, திருச்சி, கடலூர், செங்கல்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்துக்கும், கோவை, ஈரோடு மாநகராட்சிக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார்.
The post குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் தேநீர் விருந்து அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில் பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு: சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.