×

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி தலைவராக இதுவரையில் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் நியமிக்கப்படவில்லையோ அந்த சமுதாயத்தை சார்ந்த ஒருவரை கலைஞர் வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவர் பெயரை பரிந்துரைந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மறுக்கிறார்.இது கண்டனத்திற்குரியது. இன்றைக்கு சென்னை தினம். இது சென்னை தினம் என்று தான் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆளுநர் பேஸ்புக்கில் மெட்ராஸ் டே என்று போடுகிறார். தமிழ்நாட்டு மக்களை சீண்டி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகிறார்.

தமிழ்நாடு என்று சொல்வதை மறுக்கிறார். சென்னை என்று பெயர் மாற்றம் செய்ததை சொல்ல மறுக்கிறார். அதோடு மட்டுமல்ல, அரசு அறிவித்துள்ள பாடநூல்களை பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்ற உத்தரவை பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்க போவதாக சொல்லியிருக்கிறார். ஆக திட்டமிட்டு ஏதோ ஒரு சதியை, ஒரு குழப்பத்தை உருவாக்குவதற்காக அவர் செயல்படுகிறார்.இதை தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். இதற்கு உரிய விலையை ஆளுநர் ரவி பெற வேண்டியது இருக்கும்.சைலேந்திரபாபு ஒரு அரசியல்வாதி அல்ல. முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அதிமுகவினரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்தார்கள்.

எங்கள் கட்சியிலும் பல அனுபவசாலிகள் இருக்கிறார்கள். பல வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி இருந்தால் நல்லா இருக்கும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்தான் பரிந்துரை செய்து இருக்கிறோம். ஆனால், அதை கூட ஏற்கவில்லை என்றால், அதில் உள்நோக்கம் உள்ளது. நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக வரவில்லை.

அன்றைக்கு கலைஞர் எப்படி பதவி கிடைக்காதவர்களுக்கு எல்லாம் கொடுத்தாரோ, அதேபோல ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற சமூகநீதி நோக்கத்தோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை சாதி கண்ணோட்டத்தோடு பார்க்கவில்லை. இதை ஆளுநர் ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மாறாக ஆளுநர் அரசியல் செய்கிறார். கிண்டி பார்த்தால், தூண்டி பார்த்தால் நிச்சயமாக பழைய திமுக உருவத்துடன் வருவோம். வரும்போது ஆளுநரே சொல்லாமல் ஓடி போய் விடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

The post டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையில் அரசியல் செய்ய வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Governor ,TNPSC ,DMK ,RS Bharati ,Chennai ,RS Bharti ,Chennai Anna Vidyalaya ,
× RELATED கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்;...