×

இளைஞர்களின் மருத்துவ கனவை சிதைத்து தற்கொலைக்கு தூண்டும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர் கட்சி இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் உலக இளைஞர் தினவிழாவை முன்னிட்டு இளைஞர் அணி மாநாடு நடந்தது. விழாவிற்கு இளைஞரணி மாவட்டச் செயலாளர் எஸ்.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பா. அல்போன்சா பாஸ்கர், மாவட்ட செயலாளர் கே.நாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

மாநில இளைஞரணித் தலைவர் வினோத்குமார் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தலைவர் பொன்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலப் பொது செயலாளர்கள் என்.சுந்தராஜ், பொறி.எஸ்.ஜெகதீசன், ஜெகமுருகன், வி.சுப்பராயலு, பொருளாளர் ஆர்.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கிடும் நோக்கில் அவர்களின் திறனை மேம்படுத்திட தனித்துறையை ஏற்படுத்தி, ஒரே ஆண்டில் 12 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சாதனைப் படைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தனிக்கவனம் செலுத்தி, பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, பல லட்சம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதன் மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதால் முதல்வருக்கு பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் மட்டும் இதுவரை 1368 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சாதனையாகும்.

இப்படி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசின் செயல்பாட்டினை இந்த மாநாடு பாராட்டி வரவேற்கிறது. நீட் – இளைஞர்களின் தற்கொலைக்குக் காரணமான ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரை உடனடியாக ஒன்றிய திரும்பப் பெற வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post இளைஞர்களின் மருத்துவ கனவை சிதைத்து தற்கொலைக்கு தூண்டும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: விவசாயிகள் தொழிலாளர் கட்சி இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Farmers Labor Party Youth Conference ,Chennai ,Tamil Nadu Farmers-Labor Party ,Tamil Nadu Construction Workers Central Association ,World Youth Day ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...