×

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நாளை முதல் 1, 9-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: பள்ளிகல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நாளை முதல் 1 – 9 ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டுக்கான (2022-2023) இறுதி வேலை நாள் வருகிற 28-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2023-2024) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. இந்த பேரணிக்காக தயாரிக்கப்படும் பிரத்யேக வாகனத்தில் பள்ளி கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறும். இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.

மாணவர் சேர்க்கை கொண்டாட்டத்துக்கான செலவுத் தொகை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தில் இருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும். 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நாளை முதல் 1, 9-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்: பள்ளிகல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,School School Department ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...