×

சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணம் கொண்டவர்களால் அரசின் சாதனைகளை சகிக்க முடியவில்லை: அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் என்னுடைய மக்கள் பணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மேயர் பிரியா, அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரசு துறைகளை பொறுத்தவரை நான் அதிகமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றால் அது இந்து அறநிலையத்துறையில்தான். அதற்கு காரணம், அமைச்சர் சேகர்பாபுதான். சில நேரங்களில் பணியின் காரணமாக பல நிகழ்ச்சிகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாத காரணத்தால் முதல்வர் அறைக்கு அருகிலேயே செய்தியாளர் சந்திப்பு அறை இருக்கிறது – அந்த அறையில் காணொலி காட்சியின் மூலமாக சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. அந்த நிகழ்ச்சியில் கணக்கெடுத்து பார்த்தாலும், இந்த துறைதான் முதலிடத்தில் நிற்கிறது.

அதே நேரத்தில் ‘அறநிலையத் துறை சார்பில், இந்த நான்காண்டுகளில் 2,376 திருமணங்களை நடத்தி, அந்த குடும்பங்களை இன்றைக்கு ஒளியேற்றி வைத்திருக்கக்கூடிய துறைதான் சேகர்பாபு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அறநிலையத் துறை என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த 2376 திருமணங்களில் 150 திருமணங்களை நானே தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன். திராவிட மாடல் அரசில், இந்து சமய அறநிலையத் துறை மகத்தான வளர்ச்சியை கண்டிருக்கிறது. அதற்காக நேரம் காலம் பார்க்காமல், ஆன்மிக அன்பர்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், அடியாருக்கு அடியார் போல் உழைத்துகொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால்தான், பக்தர்கள் போற்றும் அரசாக தொடர்ந்து சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறோம். நமது ஆட்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளில் முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

* எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு, மூன்றாயிரத்து 177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். சாதனையில் சாதனையாக புகழ்மகுடத்தில் வைரமாக இருக்கக்கூடிய சாதனை இந்த சாதனை.
* 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,701 கோடி மதிப்பில் 7 ஆயிரத்து 655.75 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். இது அடுத்த வைரம்.
* 2 லட்சத்து 3,444 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
* ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ஆயிரம் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
* 12 ஆயிரத்து 876 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மாநில ஆலோசனைக்குழு அனுமதி அளித்திருக்கிறது.
* ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கும் வகையில், ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.
* ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள 5 ஆயிரம் கோயில்கள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள 5 ஆயிரம் கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி அளித்திருக்கிறோம்.
* ஆடி மாதத்தில், அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்து சென்றிருக்கிறோம்.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தி, இதுவரைக்கும் 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
* 12 பெண் ஓதுவார்கள் உள்பட 46 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கியிருக்கிறோம்.
* அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் திட்டத்தை 295 திருக்கோயில்களில் செயல்படுத்தியிருக்கிறோம்.
* ஒருகால பூஜைத் திட்டத்தில் பயன்பெற்று வந்த திருக்கோயில்களின் வைப்பு நிதி, ஒரு லட்சத்திலிருந்து, 2 லட்சமாகவும், இப்போது, 2 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு, 18 ஆயிரம் திருக்கோயில்கள் பயன்பெற்று வருகிறது.
* இந்த திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 900 மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறோம்.

* அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் நலன் காக்கும் வகையில், அவர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள், குடியிருப்புகள், பொங்கல் கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஆண்டுதோறும் முழு உடற்பரிசோதனை திட்டம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் பொங்கல் கருணைத் தொகை என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.
* 30 திருக்கோயில்களில், நாள் முழுவதும் திருவமுது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
* பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு வழங்கப்பட்டு, 935 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்.
* ஐந்து ஆண்டுகளுக்கு மேல், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,342 பணியாளர்கள், பணி வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வரிசையில்தான் இதுவரைக்கும் 2376 திருமணங்களை, கட்டணமில்லாமல், சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி நடத்தி வைத்திருக்கிறோம். இந்த அளவுக்கு சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்துடன், நமது அரசு செய்யும் இதுபோன்ற சாதனைகளை வெறுப்பையும் – சமூகத்தை பிளவுப்படுத்தும் எண்ணங்களையும் கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்கள் இதை பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை. பக்தி என்ற பெயரில் பகல்வேஷம் போடுகின்றவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையான பக்தர்கள், நம்முடைய ஆட்சியின் ஆன்மிகத் தொண்டை பாராட்டுகிறார்கள்.
நேற்று ஒரு வார பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் இடம்பெற்றிருந்தது. என்ன கார்ட்டூன் என்றால், எந்த பத்திரிகை என்று பெயரை சொல்ல விரும்பவில்லை – நீங்களே புரிந்து கொள்ளுங்கள் – நீங்களே படித்துப் பாருங்கள் – நான் காவடி எடுப்பது போன்றும் அமைச்சர்கள் எல்லாம் அலகு குத்திக்கொண்டு இருப்பது போன்றும் தரையில் உருளுவது போன்றும் கார்ட்டூன் அமைத்திருந்தார்கள். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை; மிகவும் பரிதாபமாக இருந்தது.

பக்திதான் அவர்கள் நோக்கம் என்றால், என்ன செய்திருக்க வேண்டும். அரசின் சாதனைகளை, ஆன்மிகத்திற்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு பாராட்டியிருக்கலாம். ஆனால், அவர்களின் நோக்கம் அதுவல்ல; பல ஆண்டுகால வன்மம் அது. அந்த வன்மத்திற்கு வடிகால்தான் இப்படிப்பட்ட கார்ட்டூன்கள். அவர்களின் ஆதரவற்ற அவதூறுகளை பற்றி நாம் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. என்னுடைய பணி மக்கள் பணி, என்ன தேவை என்பதை புரிந்து, அறிந்து அதற்குரிய பணியை ஆற்றுவதுதான் என்னுடைய பணி. எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் என்னுடைய மக்கள் பணி தொடரும். இதையெல்லாம் நான் பார்த்து கவலைப்படுகிறேன் என்று தயவுசெய்து யாரும் நினைக்கவேண்டாம். இவைகளெல்லாம் எனக்கு ஊக்கம்; இவைகளெல்லாம் எனக்கு உற்சாகம்.

இன்னும் எங்களை கேலி செய்யுங்கள் – கிண்டல் செய்யுங்கள் – கொச்சைப்படுத்துங்கள் – விமர்சனம் செய்யுங்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. திருநாவுக்கரசர் மொழியைக்கேற்ப, “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று அந்த உணர்வோடு, இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து வளங்களும் பெற்று மணமக்கள் சிறப்பாக வாழ்ந்திடவேண்டும் – ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மையோடு நீங்கள் வாழ்ந்திடவேண்டும். இன்பமான வாழ்க்கை வாழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* அரசின் சாதனைகளை, வெறுப்பையும் – சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணங்களையும் கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
* உண்மையான பக்தர்கள், நம்முடைய ஆட்சியின் ஆன்மிகத் தொண்டை பாராட்டுகிறார்கள்.
* என்னுடைய பணி மக்கள் பணி, என்ன தேவை என்பதை புரிந்து, அறிந்து அதற்குரிய பணியை ஆற்றுவதுதான் என்னுடைய பணி.
* என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம்.

The post சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணம் கொண்டவர்களால் அரசின் சாதனைகளை சகிக்க முடியவில்லை: அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Charity Department ,Chennai ,Kapaleeswarar Karpakambal Wedding Hall ,Raja Annamalaipuram, Chennai ,Hindu Religious and Charitable Endowments Department ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...