×

அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து கிண்டி மாளிகையை சதி ஆலோசனை மண்டபமாக மாற்றிய ஆளுநர் ரவி: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதி ஆலோசனை மண்டபமாக, கிண்டி மாளிகையை பயன்படுத்தி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்து செயல்களையும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதை பார்ப்பது முதல், சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார்.

‘திராவிடம்’ என்ற சொல்லை கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தை போரை தொடர்ந்து நடத்தி வருகிறார். பாஜவின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கும் சென்று ‘திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது’ என்று பேசி இருக்கிறார். ‘திராவிடம்’ என்ற சொல் ஒருகாலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது. இதனைத்தான் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் என்பவை, சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம், மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, இந்திய கூட்டாட்சி ஆகும். இதனை உள்ளடக்கியது தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியியல் கோட்பாடு ஆகும். தனது ஆட்சியின் நெறிமுறையாக இதனை வடித்துக் கொடுத்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் தனது இலக்காக முதல்வர் குறிப்பிட்டு வருகிறார். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது? ஆளுநராக வந்தவர், இந்த மாநிலத்துக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தினமும் ஏதாவது புலம்பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார். ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன – வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணை பிரசார களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். ‘ஆளுநர் பதவி என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம்’ என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதியாலோசனை மண்டபமாக, கிண்டி மாளிகையை பயன்படுத்தி வருகிறார்.

கடந்த அரைநூற்றாண்டாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம் போன சனாதன புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாட புலம்பல்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ‘ஆளுநர் எங்களுக்கு பிரசார கருவி தான். இங்கே இருந்து அவரை மாற்றி விடக் கூடாது. அவர் இருந்தால் தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும்’ என்று முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* தமிழ்நாடு’ என்ற சொல் ஆளுநருக்கு பிடிக்கவில்லை

தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் சூத்திரர்கள் என்ற கருதுகோளை விதைத்தது மனு நூல். அதன் 10வது அத்தியாயம் 44வது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பௌண்டரம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தநதம், கசம் இத்தேசங்களை யாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரராய்விட்டார்கள்’’ என்கிறது மனு. எது தமிழர்களை கொச்சைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல்லோ, அதனையே அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியது திராவிட இயக்கம். இத்தகைய திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியை காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு ‘தமிழ்நாடு’ என்ற சொல் பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக் கொள்ள முடியாது. அவருக்கு ‘திராவிட இயக்கம்’ பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார் ஆளுநர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

The post அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து கிண்டி மாளிகையை சதி ஆலோசனை மண்டபமாக மாற்றிய ஆளுநர் ரவி: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Kindi House ,Minister ,Thangam ,Southern government ,Chennai ,Tamil Nadu ,Governor RN ,
× RELATED கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக...