×

3வது நாளாக விலை உயர்ந்து சவரன் ரூ.46,200க்கு விற்பனை தினம், தினம் புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று 3வது நாளாக உயர்ந்தது. அதே நேரத்தில், சவரன் ரூ.46,200க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், மறுநாள் பெயரளவுக்கு குறைவதும், அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்வதுமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி சவரன் தங்கம் ரூ.44,920க்கும் விற்கப்பட்டது.

3ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,706க்கும், சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,648க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வை தாங்குவதற்குள், நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து 1 கிராம் ரூ.5,750க்கும், சவரனுக்கு ரூ.352 உயர்ந்து 1 சவரன் ரூ.46,000 ஆகவும் விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது.

அதாவது இதற்கு முன்னர் கடந்த மாதம் 14ம் தேதி ஒரு சவரன் ரூ.45,760 என்பது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது. இந்த சாதனையை நேற்றைய முன்தினம் தங்கம் விலை உயர்வு முறியடித்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,775க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து 1 சவரன் ரூ.46,200க்கும் விற்பனையானது. அதேநேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது. நேற்றைய முன்தினம் சாதனை முறியடிக்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ச்சியாக 3 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,280 வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்து வருவது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

The post 3வது நாளாக விலை உயர்ந்து சவரன் ரூ.46,200க்கு விற்பனை தினம், தினம் புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Chennai ,Savaran ,Dinakaran ,
× RELATED ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.880 குறைந்தது