×

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது; பண்டிகை காலம் நெருங்குவதால் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து நேற்று ஒரு சவரன் ரூ.56,800 என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 21ம் தேதி சவரன் ரூ.55,680 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு 23ம் தேதி ஒரு சவரன் ரூ.55,840, 24ம் தேதி சவரன் ரூ.56,000, 25ம் தேதி சவரன் ரூ.56,480 என்றும் அடுத்தடுத்து தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை கண்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,100க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை யானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தையும் அடைந்தது. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை கண்டு வருவது நகை வாங்குவோரை கடும் கலக்கமடைய செய்துள்ளது.

அதே போன்று வெள்ளி விலையும் தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையானது. ஆனால், நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,02,000க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்ததே தங்கம் விலை உயர முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது தவிர, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன’ என்று தெரிவித்தனர். பண்டிகை காலம் நெருங்குவதால் தங்கம் விலை இன்னும் உயர் வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

The post ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை: வெள்ளியும் போட்டி போட்டு உயருகிறது; பண்டிகை காலம் நெருங்குவதால் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!