×

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை சவரன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து சவரன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது. இதனால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி மட்டும் சவரன் ரூ.360 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.45,800க்கு விற்பனையானது. விலை சரிவால் தீபாவளி பண்டிகை நேரத்தில் தங்கம் விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரித்தது.

தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சில தினங்களில் பெயரளவுக்கு மட்டும் குறைந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.45,080க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது. 17ம் தேதி சவரன் ரூ.45,600, 18ம் தேதி சவரன் ரூ.45,600 என்று விற்பனையானது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 20ம் தேதி சவரன் ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,640க்கு விற்பனையானது. 21ம் தேதி சவரனுக்கு மேலும் ரூ.200 அதிகரித்து ரூ.45,840க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது. 23ம் தேதி மேலும் ரூ.80 அதிகரித்து ரூ.45,920க்கு விற்பனையானது. தொடர்ச்சியாக 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 வரை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை) தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.5,735க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.45,880க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,755க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.46,040க்கும் விற்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை உயர்வு தொடர்வது நகை வாங்குவோரை அதிர்ச்சிடைய செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

The post மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை சவரன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...