×

கடவுள் யார்? எதற்காக வேண்டும் கடவுள்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கடவுள் யார்? எதற்காக வேண்டும் கடவுள்?
– ராஜா, கோவை.

பதில்: மனிதன் தோன்றிய நாள் முதல், இந்த கேள்வி ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் எழுந்து கொண்டே இருக்கும். ‘‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’’ என்பதுபோல, அறிவியலாளர்களும் ஆன்மிகவாதிகளும் கடவுளை பல்வேறு விதமாக விளக்குகின்றனர்.

‘‘கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்.’’

– என்பார் கண்ணதாசன்.

உலக விஞ்ஞானிகள் பலர், கடவுளை ஏதோ ஒரு கோணத்தில் ஏற்றுக் கொள்கின்றனர். காரணம், இந்த பிரபஞ்சம் யாராலும் விளக்க முடியாததாக இருக்கிறது. இதில் நடைபெறும் நிகழ்வுகள் பல நேரங்களில் விளங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அறிவியலை மிஞ்சிய அதிசய நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடவுள் இல்லாவிட்டால் இது எப்படி சாத்தியம்?

“கடவுள் ஒருபோதும் தாமதமாக வருவதில்லை, ஆனால் நேரத்துக்கு வந்து விடுவார்’’ என்று மைக்கேல் முர்ரே என்ற அறிஞர் சொல்லுகின்றார். இதை கண்ணன், கீதையில் ‘‘தர்மம் அழியும் போது நான் அவதரிப்பேன்’’ (சம்பவாமி யுகே யுகே) என்று சொல்கிறார். கடவுள் என்பது பிராணவாயு போன்றவர். பிராணவாயுவை பார்க்க முடியாது. ஆனால் பிராணவாயு இல்லாமல் வாழ முடியாது. இதை நம்மாழ்வார் ‘‘உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன், சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே’’ என்பார்.

?ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றா? தொடர்பு உள்ளதா?
– சந்திரபோஸ், சேலம்.

பதில்: ஆன்மிகமும் அறிவியலும் ஒரே பொருளை வேறு வேறு வகையில் விளக்குவன. திருமூலர் தமது திருமந்திரத்தில் வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குகின்றார். திருமந்திரத்தில் அவர் சொல்லுகின்ற விளக்கங்கள், இன்றைய மருத்துவ அறிவியலுக்குச் சவால் விடுவன. திருமந்திரம், இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார். பட்டினத்தடிகளும் இதை உடல் கூற்று வண்ணத்தில் விளக்குகிறார்.

“ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமம் அரும்பு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து…”

சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால், குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று கலந்ததுதான்.

? கற்றாரை கற்றாரே காமுறுவர் என்கிற பழமொழி சரியா? நடைமுறையில் ஒத்து வருகிறதா?
– தேவி, சிதம்பரம்.

பதில்: “கற்றாரை கற்றாரே காமுறுவர்’’ என்றிருக்கிறதே. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையே சுவாமி. ஒரு வித்வானுக்கு இன்னொருவரைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வருகிறதே. ஏழாம் பொருத்தமாக அல்லவா இருக்கிறது.

‘‘அப்படியே எல்லா விஷயங்களையும் எடுத்துக்கொள்ளக்கூடாது… ‘‘படிச்சவன் யோக்கியன்’’ என்று சொல்வது போலத்தான். நடைமுறையில் அப்படி இப்படித்தான் இருக்கும். ‘‘இல்லை.. தெரியாமலா இப்படி சொல்லி இருப்பார்கள்’’.

‘‘அப்படியானால் இப்படி பொருள் கொள்ளுங்கள்… சரியாக இருக்கும்…’’ கற்றாரை, கற்று யாரே (கற்றாரே) காமுறுவர்? என்று எடுத்து கொள்ளுங்கள். நடைமுறைக்கு சரியாக வரும்.

?ஆண்டாளுக்கு கோதா என்று ஒரு பெயர் இருக்கிறதே. கோதா என்றால் என்ன பொருள்?
– அட்சயா,சென்னை.

பதில்: `கோ’ என்றால் மங்கலம் `தா’ என்றால் தருபவள். கோதா – மங்கலம் தருபவள் பரணி, பூரம், பூராடம் – சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்கள். சிம்ம ராசியில், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தாள் ஆண்டாள். சிம்ம ராசி என்றாலே கம்பீரம் அதிகம். ஆளுமை அதிகம். அதனால்தான் ஆண்டாள் என்று பெயர்.

……..யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம்
பூய ஏவாஸ்து பூய …………

இதில் `பலாத் க்ருத்ய’ என்ற சொல்லுக்கு இறைவனை ஆண்டாள் என்ற பொருள் வரும். ஆடி மாதத்தில் பிறந்தாள். ஆடி ஆடி அகம் கரைந்தாள். செவ்வாய்க் கிழமையில் பிறந்தாள். பூமா தேவி அம்சமல்லவா. செவ்வாய் பூமிக்கு உரியவன். தன்னம்பிக்கையும், தைரியமும், வைராக்கியமும் செவ்வாயின் குணம். தெற்குதிசை ஆகிய வில்லிபுத்தூரில் பிறந்தாள். அதனால்தான் ரங்கநாதன் அவளைப் பார்ப்பதற்காக தெற்குநோக்கி இருக்கிறான்.

?குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று ஏன் பெயர்?
– பெருமாள், மதுரை.

பதில்: பெருமாள் என்றால் வைணவ மரபிலே ராமனைக் குறிக்கும். திருவரங்கநாதனுக்கு பெரிய பெருமாள் என்று பெயர். பெரிய பெரிய பெருமாள் என்று சொன்னால், நரசிம்மரைக் குறிக்கும். இப்படி ஒரு மரபு வைணவத்தில் உண்டு. ராமானுஜர், குலசேகர ஆழ்வார் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் ஒரு தனியனை எழுதுகின்றார். அழகான தமிழ். ஒரு கிளியைப் பார்த்து, ‘‘இங்கே வா, கிளியே, உனக்கு இன்னமுதம் நான் தருவேன். நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? திருவரங்கம் பாடவந்த சீர்பெருமாள் குலசேகர ஆழ்வாரை நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் உனக்கு நான் இனிய அமுதத்தைத் தருவேன்.’’

“இன்னமுதம் ஊட்டு கேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமான் – பொன்னஞ்
சிலைசேர் நுதலியர் வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு’’

திருவரங்கநாதனை பெருமாள் என்று இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் திருவரங்கநாதனைப் பாடிய குலசேகர ஆழ்வாரை, சீர் பெருமாள் என்று குறிப்பிடும் அழகைப் பார்க்க வேண்டும்.

? இசைக்கும் இன்னிசைக்கும் என்ன வித்தியாசம்?
– ஸ்ரீதர், திண்டிவனம்.

பதில்: இதுதான் வித்தியாசம். மனிதர்கள் பாடுகின்றார்கள், மனிதர்கள் தலையசைக்கின்றார்கள், அனுபவிக்கிறார்கள், அது இசை. அந்த இசையே தெய்வத்திற்கு சமர்ப்பணம் ஆகின்றபோது, இன்னிசை ஆகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பார்ப்போம். கண்ணன் குழல் ஊதினான். அது இசையா? இன்னிசையா? இசைதான். காரணம், அவன் ஊதிய குழல் இசையில் உயிர்கள் மயங்குகின்றன.

ஆடு, மாடு, பறவைகூட அனுபவிக்கின்றன.
“சிறு விரல்கள் தடவிப் பரிமாற
செங்கண் கோட செய்ய வாய் கொப்பளிப்பு
குருவெயர் புருவும் கூடலிளிப்ப
கோவிந்தன் குழல் கொடு
ஊதினபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்
பரப்பிட்டு
செவியாட்டக் கில்லாவே’’

ஆண்டாள் பாடிய பொழுது அந்த கண்ணன் மயங்குகின்றான். எல்லோரையும் மயக்கியவன் யாரோ அவனை மயக்கிய இசை என்பதால், ஆண்டாள் பாடியது இன்னிசை. அதனால், திருப்பாவை முழுவதும் பாடி பாடி பாடி என்று பாடுவதையே பிரதானமாகச் சொல்கிறாள். சிந்திப்பதுகூட அப்புறம்தான். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்று சிந்தனையை பின்னாடி வைத்துவிட்டாள். கண்ணனை மயக்கிய இசை என்பதால், ஆண்டாள் பாடிய இசை இன்னிசை. அதனால்தான் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்.

?வியாக்யானங்களை, பாடல்களை, பாசுரங்களை ரசனையோடு பார்ப்பது எப்படி?
– அனுராதா, ஸ்ரீவில்லிப்புத்தூர்

பதில்: ஒருமுறை சொற்பொழிவில், கண்ணன் அவதாரம் செய்யும் பொழுது யூனிஃபார்மோடு பிறந்தான் என்றேன். நண்பர் சிரித்தார்.‘‘உங்கள் இஷ்டத்துக்கு சொல்கிறீர்களே’’நான் சொன்னேன்
‘‘காக்கி சட்டை, தொப்பி போலீஸ்காரருக்கு சீருடை. வக்கீலுக்கு கருப்புச் சட்டை யூனிபார்ம். காரணம் அது ஒரு அடையாளம். அதை பார்த்த உடனே இவர் வக்கீல் என்று தெரிந்து கொள்ளலாம். அதைப் போல, சங்கு சக்கரங்களோடு இருக்கின்றவன் கண்ணன் பகவான்.’’

‘‘ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்’’ என்றார்.

‘‘இதை விஷ்ணு புராணம், ஸ்ரீபாகவதம் என புராண நூல்கள் சொல்லுகின்றன. இதுபெரியவிஷயம் இல்லை. கண்ணன் யூனிபார்ம் சகிதமாகப் பிறந்தான் என்று பெரியாழ்வாரே பிள்ளைத் தமிழில் பாடுகிறார்.’’

‘‘ஆச்சரியமாக இருக்கிறது’’நான் பாசுரம் சொன்னேன்.
‘‘பேணிச் சீருடை பிள்ளை பிறந்தனில் காணத் தாம் புகுவார்’’
‘‘அதுக்கு அர்த்தம் அதுவா? எதோ ஒன்று சொல்லாதீர்கள்’’ என்றார்.

‘‘ஏதோ ஒன்று அல்ல. அவன் தனக்குரிய அடையாளங்களோடுதானே பிறந்தான். அடையாளம் என்கிறது தானே சீருடை. அதை வைத்துதான் ஆயர் புத்திரனல்ல, அருந்தெய்வம் என்றார்கள். எது எப்படியோ, சீருடை என்கிற சொல் இதில் வருகிறது அல்லவா. அதுதான் அவருடைய சீர்மை.’’‘‘வியாக்கியானத்தில் இல்லையே..’’ என்றார்.நான் சொன்னேன். ‘‘வியாக்கியானத்தில் உள்ளது, உயர்ந்த விஷயங்கள். நாம் என்ன பரீட்சையா எழுதப்போகிறோம்?! கொஞ்சம் ரசனையோடும் சில விஷயங்களைப் பார்த்தால் இன்னும் ரசிக்கும்.’’

The post கடவுள் யார்? எதற்காக வேண்டும் கடவுள்? appeared first on Dinakaran.

Tags : Saffron ,Govai ,
× RELATED மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்!