×

கற்றதை அளித்து கல்லாததை பெறுவீர் திருச்சியில் புதுமையான திறந்தவெளி நூலகம்: ஒரு புத்தகம் கொடுத்து, ஒரு புத்தகம் எடுத்து செல்லலாம்

திருச்சி: மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது? என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்ன பதில் ‘புத்தகம்’. ‘புத்தங்கள் துப்பாக்கிகளை விட வலிமையான ஆயுதம்’ என்கிறார் புரட்சியாளர் லெனின். இப்படி அறிஞர்கள் பலர் புத்தக்கத்தின் சிறப்பை புகழ்ந்துள்ளனர். புத்தக வாசிப்பு என்பது நம்மை புதுப்பித்து கொள்ள பெரிதும் உதவுகிறது. நம்முடைய காலக்கண்ணாடியாக புத்தகங்கள் திகழ்கின்றன. புத்தக வாசிப்பு அறிவியல் பூர்வமாக நமக்கு எத்தனையோ நன்மைகளை அள்ளித்தருகிறது. இதற்கு நூலகங்கள் பெரிதும் உதவுகின்றன. பண்டைய காலத்தில் அரண்மனை, கோயில்களில் படிக்கும் நோக்கமின்றி பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தோன்றி நூலகங்கள் பல்வேறு வடிவில் உருப்பெற்றன. புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல் நிலையம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதுபோன்ற நூலகம் சற்று புதுமையான விதத்தில் இருந்தால் நன்றாக தானே இருக்கும். இந்த நூலகம் ‘‘ஒரு புத்தகத்தை கொடுத்து ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வது’’ என்ற அடிப்படையில் திறந்த வெளி நூலகமாக திருச்சியில் புதுமையான முறையில் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகே கோ.அபிஷேகபுரம் கோட்டம் ஆபீசர்ஸ் காலனி சாலையில், மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நூலகம் ஒன்று 2018 டிசம்பர் 20ம்தேதி திறக்கப்பட்டது. திருச்சி மாநகரின் முதல் திறந்த வெளிநூலகம் ஆகும். இது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் ஏழு புத்தக அலமாரிகள் உள்ளது. அதில், 500 முதல் 600 புத்தகங்கள் வரை இடம் பெற்றுள்ளன. புதுவிதமாக மற்ற நூலகத்தை போல் இல்லாமல் இங்கு ஒரு புத்தகத்தை வைத்துவிட்டு அதற்கு மாறாக மற்றொரு புத்தகத்தை எடுத்து செல்லும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த திட்டம் திருச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இங்கு வாகர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து திறந்தவௌி நூலக பராமரிப்பாளர்கள் கூறுகையில், மற்ற நூலகத்தை போல் இல்லாமல் இந்த திறந்த வெளி நூலகம் பெரிதான கட்டமைப்பை கொண்டதில்லை. இருந்தாலும், இங்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். அதற்கு காரணம் இந்நூலகம் அமைந்துள்ள சூழல். இங்கு புத்தகம் படிக்க வாசகர்கள் வந்தால் மனநிறைவு கிடைக்கிறது. இந்த நூலகம் ஆரம்பித்த போது மூத்த குடிமக்கள் வருகை அதிகமாக இருந்தது. இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதிக மாணவர்கள் வந்து அரசு வேலைகளுக்கு படிப்பதற்காக புத்தகங்களை தேடி படிக்கின்றனர். படித்து முடித்த மாணவர்கள், சுயநலமின்றி போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை மற்றவர்கள் படிக்க வைத்து செல்கின்றனர். இங்கு வருவபர்களுக்கு உறுப்பினர் அட்டை கிடையாது. இதுவரை இங்கு புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்ததே இல்லை’ என்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திறந்தவெளி நூலகத்தின் நோக்கமே, கற்றதை அளித்து கல்லாததை பெற வேண்டும். அதேபோல், பகுத்தறிந்த நூல்களை அளித்து பகுத்தறிவு நூல்களை பெற்று சென்று வாசகர்கள் பயன்பெற வேண்டும் என்பது தான். வாசகர்களாகிய நாமும் இதை கடைபிடிப்போமே…

The post கற்றதை அளித்து கல்லாததை பெறுவீர் திருச்சியில் புதுமையான திறந்தவெளி நூலகம்: ஒரு புத்தகம் கொடுத்து, ஒரு புத்தகம் எடுத்து செல்லலாம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Albert Einstein ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...